அரசியல் ரீதியாக போராட திட்டமிட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து அவர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி முதல்வராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இந்த பிரச்னை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் டெல்லி ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.
அதில், டெல்லியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாநில அரசுக்கே முழு அதிகாரம் இருக்கிறது. அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகி விடும் என தெரிவித்திருந்தது.
இதையடுத்து, அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்ட மசோதாவை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை நிரந்தர சட்டமாக பாஜக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பாஜகவுக்கு மக்களவையில் தனிப்பெருபான்மையுடன் ஆதரவு உள்ள நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து டெல்லி முதல்வர் ஆதரவு கோரி வருகிறார். முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் கெஜ்ரிவால் நாளை தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு வழங்க கோரிக்கை வைக்க உள்ளார்.