சொந்த கிராமத்திலும் படுதோல்வி..! திருவண்ணாமலையை எ.வ.வேலுவிடம் தாரை வார்த்த சேவூர் ராமச்சந்திரன்..!

By Selva KathirFirst Published Jan 5, 2020, 2:48 PM IST
Highlights

இதை விட கொடுமை என்ன என்றால் சேவூர் கிராம ஊராட்சி தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட நபர் படுதோல்வி அடைந்துள்ளார். சேவூர் ஊராட்சியில் மொத்தம் உள்ள வாக்குகள் 7700. அதில் அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் வெறும் 2102 வாக்குகள். சுமார் 5 ஆயிரம் வாக்குகள் பெற்று அமைச்சரின் சொந்த ஊரிலேயே அதிமுக வேட்பாளரை மண்ணை கவ்வ வைத்துள்ளார் திமுக வேட்பாளர்.

உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் சொந்த கிராமத்தில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாகியுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 34 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் அதிமுக வெறும் 9ல் மட்டுமே வென்றுள்ளது. எஞ்சிய 25 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களையும் திமுக அள்ளியுள்ளது. மொத்தம் உள்ள 340 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் அதிமுகவிற்கு கிடைத்திருப்பது வெறும் 94 மட்டுமே. ஆனால் திமுக கூட்டணி 150க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது. எஞ்சிய 80 இடங்களை மற்ற கட்சிகளும், சுயேட்சைகளும் வென்றுள்ளன.

மொத்தம் உள்ள 18 ஒன்றியங்களை திமுக மற்றும் அதிமுக சமமான ஒன்றியங்களை கைப்பற்றியுள்ளன. ஆனால் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் சொந்த ஒன்றியமான ஆரணியை அதிமுக இழந்துள்ளது. அங்கு மொத்தம் உள்ள 18 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அதிமுக 5 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. ஆனால் திமுகவோ ஆரணியில் 12 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அமைச்சரின் சொந்த ஊரான சேவூர் வரக்கூடிய ஆரணி திமுக வசம் சென்றுள்ளது.

இதை விட கொடுமை என்ன என்றால் சேவூர் கிராம ஊராட்சி தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட நபர் படுதோல்வி அடைந்துள்ளார். சேவூர் ஊராட்சியில் மொத்தம் உள்ள வாக்குகள் 7700. அதில் அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் வெறும் 2102 வாக்குகள். சுமார் 5 ஆயிரம் வாக்குகள் பெற்று அமைச்சரின் சொந்த ஊரிலேயே அதிமுக வேட்பாளரை மண்ணை கவ்வ வைத்துள்ளார் திமுக வேட்பாளர்.

இதனிடையே எந்த ஒரு வார்டிலும் அதிமுக வேட்பாளரால் திமுக வேட்பாளரை வெல்ல முடியவில்லை. அந்த அளவிற்கு அமைச்சரின் சொந்த கிராமத்திலேயே அமைச்சருக்கு மிக கடுமையான எதிர்ப்பு இருந்துள்ளது. இதே போலத்தான் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அதிமுகவிற்க பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட அதிமுக பிரமுகர்களிடம் விசாரித்த போது அவர்கள் கூறியது.

அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது அம்மாவுக்கு ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்தே திடீரென சேவூர் ராமச்சந்திரன் அமைச்சரானார். ஆனால் அமைச்சரின் செயல்பாடுகள் துவக்கம் முதலே அதிமுக தொண்டர்கள் அரவணைத்துச் செல்வதாக இல்லை என்கிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் நிர்வாகிகளும் கூட அமைச்சருக்கு ஒத்துழைப்பது இல்லை என்று பேசிக் கொள்கிறார்கள். இதற்கு காரணம் சேவூர் ராமச்சந்திரனுக்கு ஆளுமைத்திறன் இல்லாமை என்றும் கூறுகிறார்கள்.

சொந்த ஊரில் ஒரு வார்டில் கூட கூடுதல் வாக்குகளை பெற முடியாத அமைச்சரால் எப்படி ஒரு மாவட்டத்தையே கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் அதிமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளோடு சேவூர் ராமச்சந்திரனுக்கு எதிராக தலைமையில் புகார் அளிக்க ஒரு டீம் புறப்பட்டுள்ளதாம்.

click me!