வேறு வழியில்லாமல் கோர்ட் படியேறிய நாஞ்சில் சம்பத்.. வெறுங்கையோடு திருப்பி அனுப்பிய நீதிபதி..!

By vinoth kumarFirst Published Jan 23, 2022, 5:50 AM IST
Highlights

கடந்த 2017-ஆம் ஆண்டில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதையடுத்து, பல்லாவரம், பம்மல், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டது.

தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக விமர்சித்ததாக நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. பெண் கொடுமை தடுப்பு சட்ட வழக்கை பல்லாவரம் போலீசார் விசாரிக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதையடுத்து, பல்லாவரம், பம்மல், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பெண் கொடுமை பாதுகாப்பு சட்டப் பிரிவு, அவதூறு சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி நாஞ்சில் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நாஞ்சில் சம்பத் தரப்பில், 'பெண் கொடுமை பாதுகாப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதில் உள்நோக்கம் உள்ளது. வேண்டுமென்றே இந்தப் பிரிவை சேர்த்துள்ளனர்' என்று வாதிடப்பட்டது. அப்போது புகார்தாரர் தரப்பில், 'தமிழிசை சவுந்தரராஜனை மட்டுமல்ல, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் நாஞ்சில் சம்பத் கொச்சையாக விமர்சனம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்ததுடன், பெண் கொடுமை தடுப்பு சட்ட வழக்கை பல்லாவரம் போலீசார் விசாரிக்கலாம் என்றும், மற்ற வழக்குகள் தொடர்பான ஆவணங்களையும் புகார்தாரர்கள் பல்லாவரம் போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

click me!