
போயஸ் கார்டனுக்குள் செல்ல தினகரன் தரப்பினர் தடுத்ததாக தீபா தெரிவித்திருந்த நிலையில், இதனை அவரது சகோதரர் தீபக் மறுத்துள்ளார்.
போயஸ் கார்டனுக்கு தீபாவின் திடீர் வருகை தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவின் படத்திற்கு பூஜை செய்ய தனது சகோதரர் அழைத்ததால் கார்டனுக்கு வந்ததாகக் கூறிய தீபா, தன்னை உள்ளே செல்ல விடாமல் தினகரன் தரப்பினர் மிட்டியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இப்பிரச்சனை குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக தீபாவின் சகோதரர் தீபக் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தனக்கும், தீபாவுக்கும் மட்டுமே சொந்தமானது என்றார்.
தீபாவையும் அவரது கணவரையும் கார்டனுக்குள் செல்ல யாரும் தடுக்கவில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். ஆனால் தன்னை தடுத்து நிறுத்தியதாகக் கூறி தீபா போராட்டம் நடத்தி வந்தது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார்.