
சென்னை திநகரில் உள்ள ஜெ.தீபாவின் பேரவை அலுவலகத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. அப்படி ஒன்றுதான் தீபா கட்சி ஆரம்பித்ததும்.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தீபா உருவாக்கினார். அதன் அலுவலகம் சென்னை திநகர் பாண்டிபஜார் அருகே உள்ளது. நேற்று நள்ளிரவு 3 ஆட்டோக்களில் வந்த 15 பேர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அலுவலகத்தின் அருகே இருந்த காரின் மீதும் கற்களை வீசியுள்ளனர். அலுவலக காவலரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது.
தகவல் அறிந்த தீபா சார்பில் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தேனாம்பேட்டை துணை ஆணையர் முத்தழகு தலைமையிலான போலீசார், தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளராக முன்பிருந்த இசிஆர் ராமச்சந்திரன், சமூக வலைதளங்களில் என்னை தொடர்ச்சியாக மிரட்டிவந்தார். இந்தமுறை நேரடியாக கட்சியின் அலுவலகத்தையே தாக்கியுள்ளார். சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தீபா புகார் கூறினார்.