
போயஸ் கார்டன் வீட்டில் குண்டர்களால் தாக்கப்பட்டேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பகிரங்கமாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். இச்சம்பவத்தால், பெரும் பரபரப்பு நிலவுகிறது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று காலை போயஸ் கார்டன் சென்றார். இதை அறிந்ததும், அனைத்து பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் அங்கு சென்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.
போயஸ் கார்டன் வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை என தீபா குற்றஞ்சாட்டினார். இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தீபா கூறியதாவது:-
ஜெயலலிதாவின் மரணம் குறித்து நான் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதற்காக நான் டெல்லிக்கு நாளை செல்கிறேன்.
இதை அறிந்து கொண்ட டிடிவி.தினகரன், தீபக்கை பகடை காயாக பயன்படுத்தி கொண்டு என்னை இங்கு வரவழைத்தார். இங்கு நான், எனது பாதுகாவலருடன் வந்ததும், ஒரு அறையில் உட்கார வைத்தனர்.
அங்கு ஒரு பெண், 2 ஆண்கள் இருந்தனர். அவர்கள் போலீசார் இல்லை. எங்களுடன் வந்த கேமரா மேனை அவர்கள், தாக்கினார்கள். அவரிடம் இருந்த கேமராவையும் பிடுங்கி கொண்டனர். இதை பார்த்த நான், நீங்கள் போலீசா என கேட்டதற்கு, இல்லை தனியார் நிறுவன பாதுகாவலர்கள் என கூறினார்கள்.
அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. மீடியா கேமரா மேனை எப்படி அடிக்கலாம் என கேட்டேன். இதனால் என்னையும் தாக்கினார்கள். உடனே நாங்கள் இருவரும் தப்பி வெளியே வந்துவிட்டோம்.
அப்போது பார்த்தால், இங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். நாங்கள் வரும்போது ஒரு போலீஸ்காரர் கூட இல்லை. இப்போது எப்படி வந்தார்கள் என தெரியவில்லை. நான் கொஞ்சம் அசந்து இருந்தாலும், என் அத்தையை போலவே என்னை கொலை செய்து இருப்பார்கள்.
இங்கு என்ன ஆட்சி நடக்கிறது. யார் யோகியர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து ஜெயலலிதாவை கொலை செய்துவிட்டு, இப்போது தப்பிக்க பார்க்கிறார்கள். இதற்காகவே தனித்தனி அணியாக செயல்படுகிறார்கள்.
இவ்வாறு கூறினார்.