
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரது ஆர்கே நகர் தொகுதி காலியாக இருந்தது. இதையடுத்து, வரும் ஏப்ரல் 12ம் தேதி, அந்த தொகுதிக்கு இடை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த இடை தேர்தலில், அதிமுகவில் பிளவுப்பட்டுள்ள 3 அணியினரும் தனித்தனியாக போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
சசிகலா அணியில், இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஆனால், டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதாக பேசப்பட்டது. அதில், உறுதியான முடிவு இதுவரை அறிவிக்கவில்லை.
இதேபோல், ஓ.பன்னீர்செல்வம் அணியில், மதுசூதனன் போட்டியிடுவதாக முதலில் பேசப்பட்டது. பின்னர், மூத்த தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டு கொண்டதால், அந்த அறிவிப்பும் பாதியிலேயே நிற்கிறது.
இதற்கிடையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, அவரது ஆதரவாளர்கள், தேர்தல் தேதி அறிவித்த அன்றைய நாளிலேயே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டனர்.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. சசிகலா தரப்பினரும், ஓ.பி.எஸ் அணியினரும், இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் கமிஷனிடம் மோதி கொண்டே இருக்கின்றனர்.
இந்நிலையில், அதிமுகவின் 3வது அணியான தீபா, சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு சேவல் சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார். அவருக்கு சேவல் சின்னம் ஒதுக்கப்படுமா என தீபா தரப்பினர், காத்துக் கொண்டிருக்கின்றனர்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர், அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது ஜானகி மற்றும் ஜெயலலிதா இரு அணிகளாக செயல்பட்டது. அந்த நேரத்தில் ஜானகிக்கு இரட்டை புறாவும், ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னமும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
எனவே, தனது அத்தையை போலவே, தீபாவும் அரசியல் வாழ்க்கையை சேவல் சின்னத்தில் துவங்குகிறார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், சேவல் சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போனால் மீன், தராசு, உழைக்கும் கை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு பெற்று கொள்ள வேண்டும் என தீபா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.