
இப்போ ரேஷன் கடை அடுத்து குடிநீர்…அடுத்தடுத்து போராட்டத்துக்கு தயாராகும் திமுக…
நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாததை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் நடைபெற்ற போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் சமூக நலக்கூடங்களிலும், தனியார் திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தப் போராட்டத்தில் தி.மு.க.வினர் மட்டுமல்லாமல், பல்வேறு கட்சிகள், அந்தந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆட்சியை பொறுத்தவரை, குற்றவாளி தலைமையில் நடக்கும் ஒரு பினாமி ஆட்சியாக இருக்கிறது என்றும் ரேஷன் கடையிலிருந்து தலைமைச்செயலகம் வரையில் செயல்பட முடியாத ஒரு ஆட்சி என்றும் தெரிவித்தார்.
பினாமியாக இருக்கக்கூடிய இந்த எடப்பாடி ஆட்சியில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போதே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடக்கூடிய சூழ்நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார்.
அடுத்து தண்ணீர் பிரச்சினைக்காக ஒரு வியூகத்தை அமைத்து அதற்காக அடுத்த கட்டமாக ஒரு போராட்டத்தை தி.மு.க. நடத்தும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.