
விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்
நடத்துவது என திமுக சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
விவசாயிகள் பிரச்சனை குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பாக இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், கொங்கு நாடு ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி ஜவஹாருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் காதர் மொய்தீன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். முதன்மைச் செயலாளர் துரைமுருகன், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவில், விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம், 22 ஆம் தேதி அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம், மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பிரதமரை நேரில் சந்திப்பது உள்ளிட்ட 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்று வலியுறுத்தினார். விவசாயிகளின் நலனுக்காகவே அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றதாவுகம், அரசியல் காரணங்களுக்காக இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்