டிசம்பர் 16-ம் தேதி ஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை... அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டம்!!!

By vinoth kumarFirst Published Nov 15, 2018, 12:27 PM IST
Highlights

திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் டிசம்பர் 16-ம் தேதி கருணாநிதி சிலையும், புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் அருகருகே திறக்கப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் டிசம்பர் 16-ம் தேதி கருணாநிதி சிலையும், புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் அருகருகே திறக்கப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சி எழுச்சி மிகு விழாவாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் சிலை திறப்பு விழாவில் அகில இந்திய தலைவர்கள் பலர் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது சிலையை, வரும் 15-ம் தேதி நிறுவ திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக சிலை திறப்பு விழா, அடுத்தமாதம் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை தயார் நிலையில் அண்ணா அறிவாலயம் வந்துள்ளது. இந்த நிலையில் சிலை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் முகப்பில் வைக்கப்பட்டு இருந்த அண்ணா சிலை தற்காலிகமாக இன்று அகற்றப்பட்டது. அந்த இடம் சீர் செய்யப்பட்டு, இரு தலைவர்களின் சிலைகளையும் டிசம்பர் 16-ம் தேதி அருகருகே வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த விழாவிற்கு ராகுல்காந்தி, சோனியாகாந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

click me!