2 எம்.பி., சீட்! யெச்சூரியிடமும் இறங்கி வர மறுத்த மு.க.ஸ்டாலின்!

By sathish kFirst Published Nov 15, 2018, 11:19 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு எம்.பி சீட் வேண்டும் என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை தற்போது வரை தி.மு.க தரப்பால் நிறைவேற்றப்படவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

 நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடை தங்களுக்குள் இறுதி செய்துவிட்டு தேர்தல் பணிகளில் தி.மு.க தற்போது தீவிரம் காட்டி வருகிறது. 25 முதல் 26 தொகுதிகளில் போட்டி என்று தங்களுக்கான தொகுதியையும் இறுதி செய்து வேட்பாளர் தேர்வில் தி.மு.க மும்முரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதி என்கிற தகவல் பாஸ் செய்யப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அந்த வகையில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என்று ஸ்டாலின் முடிவு செய்து வைத்துள்ளதாக பேசப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சிக்கு தென்காசி தொகுதியும், இந்திய கம்யுனிஸ்ட் கட்சிக்கு நாகை தொகுதியும் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக கடந்த வாரமே தகவல் வெளியானது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளை கேட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் இழு பறி நீடித்த காரணத்தினால் தான் சீதாராம் யெச்சூரி சென்னை வந்ததாக சொல்லப்படுகிறது. காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையின் போது தி.மு.க கூட்டணியில் கண்டிப்பாக இரண்டு தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்று நிர்வாகிகள் ஒரே குரலில் பேசியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து மாலையில் ஸ்டாலினை சந்தித்த போது முழுக்க முழுக்க தொகுதிப் பங்கீடு குறித்தே பேசப்பட்டுள்ளது.

ஆனால் எந்த இடத்திலும் ஸ்டாலின் பிடி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் மாநிலங்களவை எம்.பி சீட்டாவது ஒன்று வேண்டும் என்று யெச்சூரி கேட்டதாகவும் அதற்கு மட்டும் பார்க்கலாம் என்று ஸ்டாலின் பதில் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை எடுத்த முடிவே இறுதி என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தென்காசி தொகுதிதான் என்றும் தி.மு.க வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன.

click me!