
தமிழக காவல்துறையை அனுப்பி கூர்க் விடுதியில் உள்ள எம்.எல்.ஏக்களிடம் எடப்பாடி பேரம் பேசுவதாகவும், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தபோது விரைவில் பொதுக்குழு கூட்டி சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என எடப்பாடி தரப்பில் அறிவிப்பு வெளியானது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டிடிவிக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் எடப்பாடியை நீக்க கோரி ஆளுநரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள விடுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்தனர்.
ஆனால் இதுவரை எவ்வித முடிவும் ஆளுநர் வெளியிடவில்லை. இதனால் டிடிவி எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்கில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ளனர்.
இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பு கூறியபடி பொதுக்குழுவுக்கு தேதி அறிவித்தது. அதன்படி நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிராகவும் டிடிவிக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அடுத்த சில மணி நேரங்களில் கூர்க் பகுதியில் தனியார் விடுதியில் தங்கியுள்ள 18 பேரிடமும் தமிழக போலீசார் சுய விருப்பத்தின் பேரில் தங்கியுள்ளார்களா என கோவை போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தமிழக காவல்துறையை அனுப்பி கூர்க் விடுதியில் உள்ள எம்.எல்.ஏக்களிடம் ரூ.20 கோடி வரை எடப்பாடி பேரம் பேசுவதாகவும், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், பேரத்திற்கு பணியவில்லை என்றால் பொய் வழக்கு போடுவதாகவும் மிரட்டியுள்ளனர் எனவும், தாங்கள் யாரும் எம்.எல்.ஏக்களை மிரட்டி வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.