தயாநிதியை பின்னுக்கு தள்ளிய உதயநிதி ! மாறும் காட்சிகள் !!

By Selvanayagam PFirst Published Sep 17, 2019, 11:50 AM IST
Highlights

தந்தை பெரியாரின் 141 ஆவது நாளையொட்டி திமுக சார்பில் அவரது சிலைக்கு மரியாதை செய்தபோது முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை பின்னுக்கு தள்ளி உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனசாட்சியாக இருந்தவர் முரசொலி மாறன். அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது திமுக தொடர்பான அனைத்து டெல்லி நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டார்.

அவரது மறைவுக்குப் பிறகு முரசொலி மாறனின் இளைய மகன் தயாநிதி மாறன் முழுநேர அரசியலுக்கு வந்தார். அவரும் மத்திய அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்த நிலையில் தினகரன் எரிப்பு சம்பவத்தில் கருணாநிதி – மாறன் குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் மாறன் குடும்பம் சிறிது நாட்கள் ஒதுங்கியே இருந்தது.

இதையடுத்து அந்த இரு குடும்பங்களும் ஒன்று சேர்ந்தன. தயாநிதி மாறன் திமுகவில் மீண்டும் கோலோச்சத் தொடங்கினார். கடந்த தேர்தலில் தயாநிதி மாறன் தென் சென்னைத் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார்.

இதையடுத்து தனக்கு கட்சியிலும், டெல்லியிலும் முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. தற்போது ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி  செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து அவருக்குத்தான் கட்சியில் அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள  பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி  மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

அந்த நிகழ்வில் திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தயாநிதி மாறன் போன்ற சீனியர்கள் ஒதுக்கித் தள்ளப்பட்டனர்.

இதனால் நொந்துபோன தயாநிதி மாறன் ஒரு ஓரமாக நின்று நிகழ்வில் கலந்து கொண்டார். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே !! என தயாநிதி மாறன் புலம்பி வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

click me!