அதுக்குள்ள மறந்துட்டீங்களா ? இல்ல மறைச்சுட்டீங்களா ? திமுகவினரை வெளுத்து வாங்கிய அழகிரி மகன் !!

By Selvanayagam PFirst Published Sep 19, 2018, 6:36 AM IST
Highlights

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்,பாலு திமுகவின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டதற்காக சென்னை முழுவதும் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள வால் போஸ்டர்களில், கருணாநிதியின் படமே இல்லையே அதற்குள் அவரை மறந்துவிட்டீர்களா அல்லது மறைத்து  விட்டீர்களா என மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, அவரால் மீண்டும் கட்சிக்குள் அடி எடுத்து வைக்க முடியவில்லை. கருணாநிதி மறைந்த பிறகும் அவர் திமுகவுக்குள் ஐக்கியமாகிவிடத் துடித்தார்.

ஆனாலும் ஸ்டாலினின் கடும் எதிர்ப்பால் அவரால் திமுகவுக்குள் நுழைய முடியவில்லை. கருணாநிதி இறந்த மூன்றாவது நாளே, திமுகவின் தொண்டர்கள் எல்லாம் என பக்கம் இருக்கிறார்கள் என அவர் கொளுத்திப் போட்டார்.

இதையடுத்து செப்டம்பர் 5 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் அழகிரி சென்னையில் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினார்.  ஒரு லட்சம் பேரைத் திரட்டுவேன் என அழகிரி சவால்விட்டிருந்த நிலையில் , அதில் 10 ஆயிரம் பேர் கூட பங்கேற்கவில்லை.

இதைத் தொடர்ந்து அவர் திருவாரூரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிராக களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்த துரை முருகன் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டதையடுத்து, அந்த பதவியில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக சென்னை முழுவதும் திமுகவினர் நன்றி தெரிவித்து வால் போஸ்டர்கள் ஒட்டினர். ஆனால் அந்த போஸ்டர்கள் ஒன்றில் கூட கருணாநிதியின் படம் இடம் பெறவில்லை.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளஅழகிரியின்  மகன் தயாநிதி, அதற்குள் கருணாநிதியை மறந்துவிட்டீர்களா அல்லது மறைத்து  விட்டீர்களா ? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!