
ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுக 3 அணிகளாக செயல்படுகிறது. அதில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆரம்ப காலத்தில் இருந்த மவுசு தற்போது, சிறுக சிறுக குறைந்து கொண்டே இருக்கிறது.
இதற்கு காரணம், அவர் சரியான முடிவை எடுக்காமல் காலம் கடத்துவதே என தொண்டர்கள் மத்தியில் பேச்சு அடிப்படுகிறது.
சசிகலா தலைமையை விரும்பாத நிர்வாகிகள் பலர், தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து, தீபா பேரவையை தொடங்கினர். இதையொட்டி உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடந்து வந்தது.
இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாக பிரிந்ததும், சில நிர்வாகிகள் அவர் பக்கம் சாய்ந்தனர். இதனால், தீபாவுக்கு தொண்டர்கள் பலம் குறைய தொடங்கியது.
இந்நிலையில், ஆர்கே நகர் தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தொண்டர்களுடன் தீபா தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்காக ஆர்கே நகரில் தீபா பேரவை சார்பில் இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என நிர்வாகிகளிடம் கூறியிருந்தார்.
ஆனால், கூட்டத்துக்கு இளைஞர்கள் வரவில்லை. தீபா ஆதரவாளர்கள் மட்டுமே வந்திருந்தனர். இது தீபாவுக்கு சற்று ஏமாற்றமாகவே அமைந்தது. இதற்கிடையில், வரும் திங்கட்கிழமை (20ம் தேதி) ஆர்கே நகர் தேர்தல்
அலுவலகத்தில் தீபா வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிகிறது.
இதற்காக, வேட்புமனு விண்ணப்பங்களை நேற்று முன்தினம் வாங்கி சென்றுள்ளார். இதுதொடர்பாக வக்கீல்கள் மற்றும் முன்னாள் தேர்தல் அதிகாரிகளிடம் தீபா ஆலோசனை நடத்தி வருகிறார்.
தேர்தலுக்கு புதியவர் என்பதால், வேட்புமனுவில் என்னென்ன குறிப்பிட வேண்டும், சொத்து மதிப்புகள் எந்த அடிப்படையில் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.
மேலும், தேர்தல் பணிக்காக ஆர்.கே. நகரில் 15 பேர் கொண்ட குழுவை தீபா அமைக்க திட்டமிட்டுள்ளார். அங்குள்ள வார்டுகளுக்கு பூத் கமிட்டி அமைத்து, அதற்கான பொறுப்பாளர்களையும் நியமிக்க முடிவு செய்துள்ளார்.
இதை தொடர்ந்து தீபா, விரைவில் ஆர்கே நகரில் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்குவார் என ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் சென்னை மெரினா கடற்கரையி உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், அஞ்சலி செலுத்திவிட்டு, அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்குவார் எனவும் பேசப்படுகிறது.