தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழையக் கூடாது !! தலித் எம்.பி.யை ஊருக்குள் விட மறுத்த கிராம மக்கள்…

By Selvanayagam PFirst Published Sep 18, 2019, 9:09 AM IST
Highlights

கர்நாடகாவில் யாதவ சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் கிராமத்துக்குள் பா.ஜ.கவைச் சேர்ந்த தலித் எம்.பியை அனுமதிக்காத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு தாழ்த்தப்பட்ட மக்களையும் நாங்கள் ஊருக்குள் விட மாட்டோம் என அந்த கிராம மக்கள் பிடிவாதமாக உள்ளழ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.கவின் மூத்த தலைவரும் சித்ராதுர்கா தொகுதியின் எம்.பியுமாக உள்ளார் நாரயணசாமி. அவர், பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக தும்கூர் மாவட்டத்திலுள்ள பாவாகடா தாலுகாவில் யாதவர்கள் அதிகம் வசிக்கும் கோலாரஹட்டி கிராமத்துக்குச்  சென்றார்.

எம்.பி நாரயணசாமி கிராமத்துக்குச் சென்றபோது, கிராம மக்கள் அவரை கிராமத்துக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். தலித் மக்களை எங்கள் கிராமத்துக்குள் அனுமதிப்பதில்லை என இது குறித்து அந்த கிராம மக்கள் விளக்கமளித்துள்ளனர்.

.மேலும் கிராம மக்கள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து வெளியிலேயே உட்காரச் சொல்லியுள்ளனர். சிறிது நேரம் கழித்து, சில கிராம மக்கள் அவரை உள்ளே வரச் சொல்லியுள்ளனர். ஆனால், அவர் மறுத்துவிட்டு திரும்பச் சென்றுவிட்டார்.

நான் கிராமத்துக்குள் சென்று திரும்பிய பிறகு அவர்களுக்குள் சண்டை வருவதை நான் விரும்பவில்லை. காவல்துறையின் உதவியுடன் கட்டாயமாக கிராமத்துக்குள் நுழைய நான் விரும்பவில்லை. அவர்களுடைய மனதில் மாற்றம் வர வேண்டும் என்று விரும்புகிறேன். 

அவர்களுக்கு எதிராக நான் வழக்குப் பதிவு செய்யப்போவதில்லை. தீண்டாமை என்பது நடைமுறை எதார்த்தம். அவர்களுடைய மனதில் மாற்றம் வரவேண்டியது முக்கியம். சட்டத்தால் அதனை மாற்ற முடியாது’ என்று எம்.பி.நாராயணசாமி தெரிவித்தார்.

இதற்கு முன்பு  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலித் முன்னாள் எம்.எல்.ஏ திம்மராயப்பாவை எங்கள் கிராம மக்கள் ஊருக்குள் விடவில்லை என அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

click me!