தலித் வாக்கு வங்கிக்கு குறி! வேலூரில் இருந்து நெல்லைக்கு ஓடோடி வந்த டி.டி.வி!

By vinoth kumarFirst Published Aug 21, 2018, 11:15 AM IST
Highlights

தலித்துகளின் வாக்குகளையும் கவர வேண்டும் என்கிறநோக்கத்தோடு வேலூரில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் காரில் பயணித்து நெல்லையில் ஒண்டி வீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார் டி.டி.வி தினகரன்.

தலித்துகளின் வாக்குகளையும் கவர வேண்டும் என்கிறநோக்கத்தோடு வேலூரில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் காரில் பயணித்து நெல்லையில் ஒண்டி வீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார் டி.டி.வி தினகரன். தேவர் சமுதாயத்தை சேர்ந்த டி.டி.வி தினகரன் அ.ம.மு.கவின் முக்கிய பொறுப்புகளிலும் அதே சமுதாயத்தை சேர்ந்தவர்களையே நியமித்து வருகிறார். மேலும் தனக்கு நெருக்கமாக இருக்கும் பலரும் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவே இருக்குமாறு தினகரன் பார்த்துக் கொள்கிறார். இதனால் தினகரனின் அ.ம.மு.கவை முக்குலத்தோருக்கான கட்சி என்றே பலரும் விமர்சித்து வருகின்றனர். 

இதனால் தென்மாவட்டங்களில் தலித்துகளின் வாக்குகளை இழக்க நேரிடும் என்று தினகரனுக்கு பலரும் பலமுறை எடுத்துக்கூறியுள்ளனர். இதனை இத்தனை நாள் சீரியசாக எடுத்துக் கொள்ளாத தினகரன் விரைவில் திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் வர உள்ளதால் சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் திருப்பரங்குன்றத்தில் தலித்துகளின் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் அளவிற்கு கணிசமான அளவில் உள்ளது. 

வழக்கமாக ஒண்டி வீரன் நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் விழாக்களில் ஒவ்வொரு கட்சியும்தனது நெல்லை மாவட்ட செயலாளரை அனுப்பி மரியாதை செலுத்துவது வழக்கம். அ.தி.மு.க மற்றும் தி.மு.கவில் தலித்துகளாக இருக்கம் முக்கிய நிர்வாகிகளும் நெல்லை சென்று ஒண்டி வீரன் சிலைக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சபாநாயகர் தனபால் ஒண்டி வீரன் சிலைக்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உடன் சென்றனர்.  ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தினகரன் நேரடியாக நெல்லை சென்று ஒண்டி வீரன் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

 அதிலும் நேற்று வேலூரில் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு,இரவோடு இரவாக காரிலேயே பயணம் செய்து நெல்லை சென்றுள்ளார் தினகரன். வழக்கம் போல் தனது கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளரை அனுப்பி தினகரன் மரியாதை செலுத்த கூறியிருக்கலாம். ஆனால் திருப்பரங்குன்றம் தேர்தலில் தலித்துகளின் வாக்கு முக்கியம் என்பதால் தான் சுமார் 600 கிலோ மீட்டர் இரவோடு இரவாக பயணித்துச் சென்று தினகரன் ஒண்டி வீரன் சிலைக்கு மாலை அணிவித்துள்ளார். அதுமட்டும் இன்றி அப்போது தன்னுடன் தலித் நிர்வாகிகள் பலரையும் அழைத்துச் சென்று நெருக்கம் காட்டியுள்ளார் தினகரன்.

click me!