தென் மாவட்டங்களில் கட்சியை அழிக்கப் பார்க்கிறார் தளவாய் சுந்தரம் !! பரபரக்கும் வால்போஸ்டர்ஸ் !!

By Selvanayagam PFirst Published Jun 30, 2019, 9:06 AM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவை அழித்துவிட்டு, தற்போது நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கட்சியை அழிப்பதற்கு தளவாய் சுந்தரம் கோஷ்டி அரசியல் செய்து வருவதாகவும், அவர்  டி.டி.வி.தினகரனின் கைக்கூலியாக செயல்படுவதாகவும் அவரை உடனடியாக கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்றும் தென் தமிழகத்தில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள வால் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த .தளவாய்சுந்தரதம் தற்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இவர் சசிகலா மற்றும் தீவிர ஆதரவாளராகவே இருந்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்நிலையில்தான் கோஷ்டி அரசியல் செய்து வரும் தளவாய் சுந்தரத்தை கட்சியை விட்டு நீக்குங்கள்! உண்மைத் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்!' என, அ.தி.மு.க அம்மாவின் உண்மை விசுவாசிகள் என்ற பெயரில் தென் மாவட்டங்களில் சில ஊர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தளவாய் சுந்தரம் சென்னையில் ஒரு சாதாரண வழக்கறிஞராக இருந்தவர், சிசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது அவருக்கு  தினமும் வெளியில் இருந்து சாப்பாடு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார். 

1995-ல் தென்சென்னை மாவட்ட செயலாளராக இருந்த ஆதிராஜாராமுக்கு ராஜ்யசபா சீட் தரும் யோசனையில் கட்சித் தலைமை இருந்தது. அப்போது, அவர் மீது வக்கீல் விஜயன் தாக்கப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவாகி இருந்ததால், அந்த வாய்ப்பை யாருக்குத் தரலாம் என்று ஆலோசனை நடந்தபோது, தளவாய் சுந்தரத்தின் பெயரைச் சொன்னார் பாஸ்கரன். அதன்பிறகே, சசிகலா சிபாரிசில் முதன்முறையாக ராஜ்யசபா எம்.பி ஆனார் தளவாய் சுந்தரம். பின்னர், 1999-ல் டிடிவி.தினகரன் எம்.பியானவுடன், டெல்லியில் அவருடைய தேவைகளைப் பூர்த்திசெய்து நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.

இப்படித்தான் அதிமுகவில் தனது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டார். பின்னர், பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை என முக்கியமான துறைகளுக்கு அமைச்சராக்கப்பட்டார்

ஆனால் ஒரு கட்டத்தில் ஜெயலலிதா அவரை தூக்கி எறிந்தார். 2001-ல் இவரோடு சேர்த்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் கே.டி.பச்சைமால், கே.பி.ராஜேந்திரபிரசாத் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றனர். 

ஆனால், தனது கோஷ்டி அரசியலால், மூத்த கட்சியினரை சசிகலா தரப்பினரை வைத்துக் காலி செய்து விட்டார். இன்று 3 தொகுதிகளில் டெபாசிட் காலியாகின்ற அளவுக்கு கட்சியை அழித்தும் விட்டார். தற்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தென்மாவட்டங்களில் தான் மட்டுமே நெருக்கமானவர் என்ற இமேஜை உருவாக்கப் பார்க்கிறார்.  மேலும் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை இவர் உடனுக்குடன் டிடிவி.தினகரனுக்கு ரன்னிங் கமென்டரிபோல கொடுத்துக்கொண்டே இருக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் தான் தளவாய் சுந்தரத்துக்கு எதிராக தென் மாவட்டங்களில் இந்த பரபரப்பு வால் போஸ்டர்கள் முளைத்துள்ளன.

ஏற்கனவே ஒற்றைத் தலைமை என்று முதலில் எதிர்ப்பு கிளம்பியது மதுரையிலிருந்துதான். இதே போல் தங்கத் தமிழ் செல்வனை அதிமுகவுக்குள் சேர்க்கக் கூடாது என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தற்போது அதிமுகவை அழிக்கிறார்கள் என்று போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் தென் மாவட்டங்களில் இருந்துதான்!

click me!