நடிகர் சரத்குமாரின் ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு... ராதிகாவுக்கு பிடிவாரண்ட்...!

By vinoth kumarFirst Published Apr 7, 2021, 3:00 PM IST
Highlights

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனையை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனையை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 

நடிகர் சரத்குமார், ராதிகா ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கக்கூடிய மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு மற்றும் கீர்த்தி சுரேஷ்  ஆகியோரை வைத்து இது என்ன மாயம் என்ற திரைப்படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 1.5 கோடி ரூபாய் கடனை ரேடியண்ட் மீடியா என்ற நிறுவனத்திடம் பெற்றிருந்தது. 

இந்த பணத்தை 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திருப்பி தந்துவிடுவதாகவும், பணத்தை கொடுத்த பிறகுதான் படத்தை வெளியிடுவோம் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், உத்தரவாதம் அளித்தப்படி பணத்தை திருப்பி கொடுக்காமல் பாம்பு சட்டை என்ற மற்றொரு படத்தை நடிகர் சரத்குமார், ராதிகாவும் தயாரித்ததால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., மற்றும் எம்எல்ஏக்கள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் எதிர் மனுதாராக சேர்க்கப்பட்டார். 2 வழக்குகளில் ராதிகா மற்றும் ஸ்டீபன் ஆகியோரும் எதிர் மனுதாராக  சேர்க்கப்பட்டனர். தாங்கள் மோசடி செய்ய நினைக்கவில்லை. வட்டி அதிகமாக கேட்டதால் பணத்தை உடனே திரும்ப  செலுத்த முடியவில்லை என்று வாதிடப்பட்டது. 

ஆனால், காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 3 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் 7 வழக்குகளில் எதிர் மனுதாரராக இருக்கும் சரத்குமாருக்கு தலா ஓராண்டும் ராதிகா மற்றும் ஸ்டீபனுக்கு 2 வழக்குகளில் ஓராண்டும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

இந்நிலையில், மேல்முறையீடு செய்யும் வரை தங்களது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மூவர் தரப்பிலும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் சரத்குமார், ஸ்டீபன் ஆகியோரின் சிறை தண்டனையை ஒரு மாதம் காலம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. விசாரணைக்கு ஆஜராகாத ராதிகாவுக்கு பிடிவாரண்ட்  பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. கொரோனா பாதித்ததால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என ராதிகா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

click me!