
பொதுமக்கள் தங்கள் புகார்களை மின்னஞ்சலில் மட்டும்தான் அனுப்பவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் அவர்கள் வாட்ஸ்அப்பிலும் அனுப்பலாம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த தமிழக அமைச்சர்கள் கமலஹாசனை திட்டித் தீர்த்தார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நடிகர் கமலஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில், பொது மக்கள் தாங்கள் சந்தித்த ஊழல் சம்பவங்களை அந்தந்த துறைகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பு வையுங்கள் என்று கூறி மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தற்போது அரசு இணையதளத்தில் புகார் அளிக்கும் மின்னஞ்சல் முகவரிகள் அழிக்கப்பட்டு மாயமாகியிருந்தது.
இது தொடர்பான கேள்விக்கு சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், மின்னஞ்சல் முகவரிகள் காணாமல் போனதாக கூறுவது தவறான தகவல் என தெரிவித்தார்.
புகார்களை மின்னஞ்சலில் மட்டும்தான் அனுப்ப வேண்டுமா ? வாட்ஸ்அப்பில்கூட அனுப்பலாமே என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து கமலஹாசன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது எரிச்சலான சி.வி.சண்முகம், கமலஹாசனுக்கு எல்லாம் பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றும், அவரெல்லாம் ஒரு ஆளு என தெரிவித்தார்.