
தமிழக சட்டப் பேரவைக்கு இப்போது தேர்தல் நடத்தினாலும் அதனை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என அமைச்சர் சி.வி.சண்முகம் சவால் விட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன்,
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இரு அணிகளும் இணைவத குறித்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இரு தரப்பு தலைவர்களும் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதையடுத்து இணைப்பு முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா அணியைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகம்,
"அதிமுகவில் இரு அணிகளாக இருப்பதால், தமிழகத்துக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். அதுபோல் தேர்தல் வந்தால், எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அதே நேரத்தில், ஆட்சி கலைய கூடாது என்ற எண்ணத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர், எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, இணைந்து கொண்டாலும், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அதிமுகவில், உட்கட்சி பூசல் இருப்பதாக வதந்தியை பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் பொய். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.