
தமிழ்நாட்டின் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
மாநிலம் முழுவதும் 6-1-2022 முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலும் ஊரடங்கு அமல் படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள் வணிக நிறுவனங்கள் கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை. எனினும் இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது பின்வரும் அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும். மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து சேவைகள், மாநிலங்களுக்கு இடையேயான பொது, தனியார் பேருந்து சேவைகள். (அந்தப் பயணத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முகக்கவசம் அணிதல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் உள்ளிட்டவை பின்பற்ற வேண்டும்) இல்லை என்றால் குறிப்பிட்ட பேருந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் அத்தியாவசிய பணிகளான, பால் வினியோகம், தினசரி பத்திரிக்கை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் பெட்ரோல், டீசல், எல்பிஜி இரவு நேரங்களில் அனுமதிக்கப்படும். அதேபோல் பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறுவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பிடம் அத்தியாவசிய பணிகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து போன்றவை தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும். பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவையும் இயங்காது. முழு ஊரடங்கின்போது உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் 7:00 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
இதர மின் வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது. 9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10 மணி வரை முதல் காலை 5 மணி வரை விமானம் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்கான விமானம் ரயில் மற்றும் பேருந்து நிலைகளுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படும். பயணிக்கும்போது பயணச்சீட்டு வைத்துக்கொள்ள வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒராண்டுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் கொரோனா மறு புறம் கட்டுப்பாடுகளால் கேள்விக் குறியாகும் வாழ்வாதாரம் என்ற கவலையில் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.