போலீசிடம் சிக்காமல் இருக்க.. காரிலேயே கர்நாடகத்தை ரவுண்டு அடித்த ராஜேந்திர பாலாஜி..?? விசாரணையில் பகீர் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jan 5, 2022, 2:33 PM IST
Highlights

அதிமுகவில் அவருக்கு நெருக்கமான பெங்களூரு நிர்வாகி ஒருவர் அவருக்கு உதவியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் ரிசார்ட் மற்றும் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கினால் போலீசில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதால் ராஜேந்திரபாலாஜி சொகுசு காரிலேயே தங்கி பெங்களூரில் பல்வேறு பகுதிகளுக்கு உலா வந்ததாகவும் கூறப்படுகிறது.

3 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் வாசலில் வைத்து கைது செய்துள்ளனர். ஹோட்டல் மற்றும் ரிசார்ட்களில் அறையெடுத்து தங்கினால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்று அஞ்சி அவர் சொகுசு காரிலேயே உலா வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் அவருக்கு உதவியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆவின் மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலினை மிக மோசமாக விமர்சித்து வந்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் அப்போது உறுதி அளித்து இருந்தார். அதிமுக ஆட்சியின் போது மற்ற அமைச்சர்களை காட்டிலும்  திமுகவையும் அதன் தலைவர்களையும் மிக கடுமையாக விமர்சித்து பேசி வந்தார் கே. டி ராஜேந்திர பாலாஜி. மோடி எங்கள் டாடி என்று அவர் பேசியது பேசு பொருளானது.  திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் குறி ராஜேந்திரபாலாஜிக்கு தான் என கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில் திமுக ஆட்சி அமைத்த உடன் ஆவின் நிறுவனத்தில்  நடந்த முறைகேடுகள் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் ஆராயப்பட்டதில் ஆவின் நிறுவனத்தில் பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை பெற்று கே.டி ராஜேந்திர பாலாஜி மோசடி செய்தது தெரியவந்தது. கிட்டத்தட்ட அவர் 3 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததும்  உறுதியானது. எனவே அவர் மீது விருதுநகர் போலீஞ்சார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அதில்  தனக்கு ஜாமீன் வழங்க கோரி ராஜேந்திரபாலாஜி நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவர் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து அவர் திடீரென தலைமறைவானார். எனவே 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ராஜேந்திரபாலாஜி போலீசார் தேடிவந்தனர். அவர் கேரளாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்றும் கர்நாடகத்தில் பதுங்கி இருக்கிறார் என்றும் அவர் மும்பை வழியாக டெல்லிக்கு பறந்து விட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கர்நாடகாவில் அசனில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜியை போலீசார் கைது செய்துள்ளனர். ஓசூர் அருகே அசனில் பி.எம் சாலையில் டி-ஷர்ட், காவி லுங்கியுடன் காரில் சென்று கொண்டிருந்த அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசார் தன்னை சுற்றி வளைத்துவிட்டனர் என்பதை அறிந்து அவர் தப்ப முன்றதாகவும் ஆனால் போலீசார் லாவகமாக அவரை சுற்று வளைத்து கை செய்துள்ளனர். அதற்கான பரபரப்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. முன் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவில் அவருக்கு நெருக்கமான பெங்களூரு நிர்வாகி ஒருவர் அவருக்கு உதவியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் ரிசார்ட் மற்றும் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கினால் போலீசில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதால் ராஜேந்திரபாலாஜி சொகுசு காரிலேயே தங்கி பெங்களூரில் பல்வேறு பகுதிகளுக்கு உலா வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசார் டிராண்சிட் வாரண்ட் பெற்று  சாலை மார்க்கமாக சென்னைக்கு அழைத்து வரஉள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுநாள்வரை அவர் தலைமறைவாக இருக்க அவருக்கு உதவியவர்கள் யார் யார் என்பது குறித்தும் முழுமையாக விசாரித்து அவர்கள் மீதும் போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 

click me!