திமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்த கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன் மீண்டும் கட்சிக்குள் வந்த பின்னணியில் பாஜக துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதும், ஆட்சியைப் பிடிப்பதும் ஒரு அஜெண்டாவாக அக்கட்சி கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்கு தகுந்தார்போல் இனி பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி தென்னிந்தியாவில் இருக்கும் என்று தேசிய செயற்குழுவில் அமித் ஷா அறிவித்திருந்தார். பலமில்லாத மாநிலங்களில் மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்களை இணைத்து, அக்கட்சி வளர்ந்து வந்திருக்கிறது. தமிழகத்திலும் வளர, குறிப்பாக திமுகவில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு பாஜக வலைவிரித்து வைத்திருக்கிறது. கடந்த 2020-ஆம் ஆண்டில் மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமியை பாஜகவுக்குள் இழுத்து திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தது பாஜக. அவரைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ. கு.க்.அ செல்வத்தை பாஜகவுக்குள் கொண்டு வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சில மாதங்களுக்கு முன்பு கு.க. செல்வம் மீண்டும் திமுக திரும்பியது தனிக்கதை.
இதையும் படிங்க: கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பன் மீண்டும் திமுகவில் இணைப்பு.. ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து அறிவிப்பு..
இவர்களைப் போல அதிருப்தியில் இருந்த கே.பி. ராமலிங்கம் உள்பட ஒரு சிலர் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு திமுகவிலிருந்து கடலூர் எம்.எல்.ஏ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு கட்சி அறிவித்த சுந்தரி ராஜாவிற்கு எதிராக கடலூர் எம்.எல்.ஏ அயப்பன் ஆதரவாளர் கீதா குணசேகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் மறைமுகத் தேர்தலில் மொத்தமாக பதிவான 32 வாக்குகளில் 19 வாக்குகள் பெற்று சுந்தரி ராஜா மேயராக வெற்றி பெற்றார். 12 வாக்குகள் பெற்று கீதா குணசேகரன் தோல்வியை தழுவினார்.
இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ பாஜகவில் இணைகிறாரா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்..!
கீதா குணசேகரனின் கணவரும், திமுக மாவட்ட பொருளாளருமான குணசேகரன் தற்கொலைக்கு முயற்சித்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டதால், இந்த விவகாரம் பெரும் விவாத பொருளானது. இதனையடுத்து கடலூர் திமுக எம்.எல்.ஏ அய்யப்பனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்து நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தது. திமுகவிலிருந்து ஐயப்பன் நீக்கப்பட்டு 5 மாதங்கள் கடந்தும், அவரை கட்சியில் சேர்க்க திமுக தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்து கட்சிப் பணியாற்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அனுமதி வழங்கி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
அய்யப்பனை திமுகவில் இணைத்ததன் பின்னனியில் எம்.எல்.ஏ.வின் பாஜக அஸ்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடலூர் திமுகவில் சீட்டு கிடைக்காத அதிருப்தியில் இருந்த ஒன்றிய செயலாளர் மாமல்லன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாவட்ட தலைவர் பதவியை பாஜக வழங்கியது. ஒன்றிய செயலாளருகே அந்த மரியாதை என்றால், சிட்டிங் திமுக எம்.எல்.ஏ. பாஜகவுக்கு சென்றால், ராஜ மரியாதை கிடைக்கு என்பதால், அய்யப்பனையும் பாஜகவில் இணையச் சொல்லி அவருடைய ஆதரவாளர்கள் வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் ஏக்நாத் ஷிண்டே அதே பெயரில் இருக்க வேண்டும் என்பதில்லை..! வேறு பெயரிலும் இருக்கலாம் - அண்ணாமலை
இந்தச் சூழலில்தான் அய்யப்பன் பாஜகவில் இணைகிறார் என்ற செய்தி மீடியாக்களில் கசிந்தது. ஏற்கெனவே ஏக்நாத் ஷிண்டே போல திமுகவில் இருந்து கிளம்புவார்கள் என்று பாஜகவினர் பேசி வரும் நிலையில், பாஜகவுக்கு செல்லும் அய்யப்பன் என்ற செய்தி, திமுக முகாமில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே அய்யப்பனிடம் மன்னிப்புக் கடிதம் பெற்று, அவர் மீண்டும் திமுகவில் இணைக்கப்பட்டதாக திமுக வட்டாரங்களிலேயே பேசப்படுகிறது. ஐந்து மாதங்களாக திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தும் கட்சியில் இல்லாமல் இருந்த அய்யப்பன், மீண்டும் கட்சிக்குள் திரும்ப பாஜக என்ற அஸ்திரம் உதவியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.