கடலூரில் ரூ.51 லட்சம் பறிமுதல்... ஆம்பூர், வாணியம்பாடியிலும் தேர்தல் பறக்கும் படை அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 2, 2021, 11:59 AM IST
Highlights

இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த காரில் ரூ.51 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு, மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே பொதுமக்கள், வியாபாரிகள், அரசியல் கட்சியினர் என யாரும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லக்கூடாது உள்ளிட்ட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதை தவிர்ப்பதற்காக மாவட்ட எல்லைகள் மற்றும் பிரதான சாலைகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த காரில் ரூ.51 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் வந்த ராம்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மங்களூரில் தொழிற்சாலை நடத்தி வருவதாகவும், அதற்காக பணம் எடுத்துச் செல்வதாகவும் கூறப்பட்டது. ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேருந்ச்து நிலையத்தில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, கொரட்டி பகுதியை சேர்ந்த கோழி வியாபாரி ராஜேந்திரன் என்பவரிடமிருந்து 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது. 

ஆம்பூர் அடுத்த மாதனூர் சோதனைச்சாவடியில் சென்னையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா சென்ற திலீப் குமார் என்ற கல்லூரி மாணவனிடம் இருந்து 93 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சார்நிலை கருவூலத்தில் பணத்தை ஒப்படைத்தனர். 
 

click me!