
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைது கண்டித்து மேடையில் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தே போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நேற்று காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. காலை முதல் முன்னணி நிர்வாகிகள் பலர் கண்டன உரையாற்றி வந்தனர்.
மாலையில் மாவட்ட துணைத்தலைவர் முருகன், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் காங்கிரசார் அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே முருகன் இறந்துவிட்டதாக கூறினார்.
இதய நோயாளியான முருகன், உண்ணாவிரதம் இருந்ததால் ரத்த அழுத்தம் திடீரென குறைந்து மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடலூர் முதுநகரை சேர்ந்த முருகன் (61) கடந்த 1980 முதல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தார். ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழிலையும் செய்து வந்துள்ளார். போராட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போதே காங்கிரசின் முக்கிய நிர்வாகி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.