
தி.மு.க.விலும், அ.தி.மு.க.விலும் ‘உட்கட்சி தேர்தல்’ நடக்கிறதென்றால் கிளைவாரியாக அல்லு தெறிக்கும். சொந்தக் கட்சியினரின் ஆதரவைப் பெறுவதற்காக கோடிகள் புழங்குவது, நடு ரோட்டில் வேஷ்டி கிழிவது, பத்து பதினைந்து மாவட்டங்களில் ரத்தம் பார்த்துதான் அடங்குவார்கள்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் ஜெ., இருக்கும் வரையில் நியமனம் மட்டுமேதான் நடந்தது. ஆனாலும் கூட பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
ஆனால் வாழ்ந்து கெட்ட கட்சியான தே.மு.தி.க.வில் கடந்த ஜனவரி முதல் உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறதாம்!? இதை சொன்னால் யாரும் நம்பப்போவதில்லை ஆனாலும் அது உண்மைதான் என்று சுதீஷின் சின்னம்மா பையனுடைய ஃப்ரெண்டு கூட நேற்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்திருக்கிறார்.
ஒருத்தனுக்குமே தெரியாத வகையில் அந்த கட்சிக்குள் உட்கட்சி தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் விஜயகாந்துக்கோ கனவெல்லாம் கட்சித்தேர்தல்தான் வந்து செல்கிறது. ‘கேப்டன் எனக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கலேன்னா இங்கேயே தீக்குளிப்பேன்.’ என்று தொண்டர் ஒருவர் கெரெசினை எடுத்துக் கொண்டு ஆட, கடுப்பாகும் கேப்டன் பொளேர் என்று அவர் கன்னத்தில் அறைவிட ஏரியாவே ரணகளமாகிறது.
அடிவாங்கியதென்னவோ அந்த தொண்டர்தான், ஆனால் கேப்டன் கையில் செம்ம வலி! பதறி எழுந்தால் அட கனவுடா கருமம் இது. தொண்டனை அடிக்கிறேன்னு சொல்லி கட்டிலுக்கு பக்கத்துல இருந்த ஸ்டூலை அடித்திருக்கிறார்.
கேப்டனுக்கு கனவில் இப்படி வந்தாலும் கூட யதார்த்தத்தில் என்னவோ தலைகீழாக நடக்கிறது நிகழ்வுகள். பல மாவட்டங்களில் செயலாளர்களாக இருந்த நபர்கள் எப்பவோ பிய்ச்சுக் கொண்டு போய்விட்டதால் அந்த இடத்துக்கு புதிய நபர்களை விஜயகாந்தே அழைத்து நியமிக்கிறார்.
ஆனால் கேப்டனே கதறுமளவுக்கு ஒரு அதிர்ச்சி ட்விஸ்ட் இதில் நிகழ்ந்திருக்கிறது. அதாவது ‘கேப்டன் என்னைய மாவட்ட செயலாளர் பதவி கொடுத்தீங்கன்னா இங்கேயே தீக்குளிப்பேன்.’ என்று மிரட்டாத குறையாக அதில் பலர் வாபஸ் வாங்கியிருக்கின்றனர். கனவுல வேற மாதிரி பேசினானுங்க, நினைவுல வேற மாதிரி பேசுறானுங்களே என்று கேப்டன் பேஸ்தடித்து நின்றிருக்கிறார்.
இந்நிலையில் தே.மு.தி.க.வின் நிர்வாக பதவிகளில் உட்கார பலரும் விரும்பாத காரணம், புதிய நபர்கள் கையில் பசையில்லை. எல்லாமே நடுத்தர மற்றும் ஏழை பார்ட்டிகள். இதைவிட முக்கிய காரணம் இன்னொன்று. ஒரு காலத்தில் தே.மு.தி.க. நிர்வாகி எனும் பெயரை சொன்னாலே ‘எவ்வளவு வேணும் தல?’ என்று ஏரியாவில் ரொட்டேஷனுக்கோ அல்லது நன்கொடையாகவோ வணிகர்கள் பணத்தை வழங்குமளவுக்கு கட்சி கெத்தாக இருந்தது.
ஆனால் இப்போதோ நிதி கேட்டால் ‘ப்ரோ! இன்னுமா உங்க கட்சி நடக்குது?’ என்று நடைபாதை வியாபாரி கூட நக்கல் விடுமளவுக்கு கட்சியின் நிலை தே.....ய்ந்து விட்டது. அதனால்தான் பதவியை ஏற்றுக் கொள்ள பதறி தெறிக்கின்றனர் பலர்.
இந்த யதார்த்தமெல்லாம் புரிந்து கொண்டிருக்கும் பார்த்தசாரதி போன்ற மூத்த நிர்வாகிகள் கவலைக்கடலில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் விஜயகாந்த் செய்யும் சில வேலைகள் முக்கிய நிர்வாகிகளை தலையிலடிக்க வைத்துள்ளதாம்.
அதாவது உள்ளூரில் தன் கட்சி போணியாகாத நிலை புரிந்தும் புரியாதவராய் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் தன் கட்சியின் பெயரை சொல்லி சில நிர்வாகிகளை நியமித்துள்ளாராம் விஜயகாந்த். டெல்லி, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு நிர்வாகிகளின் பெயர்களை அறிவித்துள்ளார். இது போக குவைத், சவுதி மற்றும் துபாய் நாடுகளிலும் நிர்வாகிகளை நியமித்துள்ளாராம்.
கேப்டனின் இந்த களேபர நடவடிக்கையை உட்கட்சியினரே கிண்டலடிக்க துவங்கியுள்ளனர். ‘ஏம்பா! அடுத்த வாரம் சைனாவுல பழனியப்பா வீதி மூணாவது குறுக்கு சந்துல கார்ப்பரேஷன் கொழாயில தண்ணீர் வராததை கண்டிச்சு நம்ம சார்பா கண்டன ஆர்பாட்டம் நடக்குது.
யாரெல்லாம் கொடியெடுத்துட்டு வர்றீங்க, கை தூக்குங்க.’ என்று தங்களுக்குள்ளே காமெடி செய்து வெடிச்சிரிப்பு சிரிக்கின்றனராம்.
ஜெயலலிதாவும், கருணாநிதியும், பா.ஜ.க.வும், ம.ந.கூட்டணியும் தேடிவிரட்டி கூட்டணி வைக்க துடித்த தே.மு.தி.க.வுக்கா இந்த நிலை?!
அய்யகோ! அக்கட்சியின் வில்லன் யாரென்று இப்போது புரிகிறதா!