பல் பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு.! கடுமையான தண்டனை வழங்கிடுக- கே.பாலகிருஷ்ணன்

By Ajmal Khan  |  First Published Apr 18, 2023, 8:48 AM IST

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி வதைத்த ஏ.எஸ்.பி., பல்பீர் சிங் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை கருங்கற்களால்  உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு உதடுகளிலும், கன்னத்திலும் ரத்தம் வரும் வரை காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் தாக்கினார் என்ற புகார்கள் எழுந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன. இதனையடுத்து பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் பணியாற்றியமற்ற காவலர்களும் இட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தியது. மேலும் தமிழக அரசு சார்பாக ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tap to resize

Latest Videos

அவதூறு பரப்பும் அண்ணாமலையை சும்மா விடமாட்டோம்.. களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்..!

கிரிமினல் வழக்கு பதிவு

இந்த நிலையில் பல்வீர் சிங் மீது தற்போது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மரணத்தை விளைவிக்கும் வகையில் ஆயுதத்தால் தாக்குதல், சித்தரவதை செய்தல் ஆகிய குற்றங்களுக்கான ஐ.பி.சி 326 பிரிவின் கீழ் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி வதைத்த ஏ.எஸ்.பி., பல்பீர் சிங் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.  வதையில் ஈடுபட்ட அதிகாரியும், காவல்துறையினரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

வரவேற்பு தெரிவித்த சிபிஎம்

இருப்பினும், விரைவாக குற்ற வழக்கு பதிந்து சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை சிபிஐ(எம்) முன்வைத்தது. மனித உரிமையை முன்வைத்து இயங்கும் பல்வேறு இயக்கங்களும் இதே கோரிக்கையை வலியுறுத்திவந்தன.தற்போது தமிழ் நாடு அரசாங்கம், பல்பீர் சிங் மேற்கொண்ட கொடும் வதையினால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிந்துள்ளது அவசியமான, வரவேற்க வேண்டிய நடவடிக்கையாகும். இந்த வழக்கினை முறையாக முன்னெடுத்து குற்றமிழைத்தோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமெனவும் சி.பி.ஐம்(எம்) சார்பில் தமிழ் நாடு அரசை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

அண்ணாமலை உளறுகிறார்..! அவர் பேச்சை கண்டுகொள்ள வேண்டியதில்லை- இறங்கி அடிக்கும் கேஎஸ் அழகிரி

click me!