அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் ஏதோ அப்பாவி போல ஊடகங்களிடம் நடித்து வந்தார்.இப்போதும், துப்பாக்கிச் சூட்டின் கொடூரம் தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பதுடன் உண்ணாவிரதம் என்ற பெயரால் திசைதிருப்புவதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை நேற்று சட்ட பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் தூத்துக்குடி கலவரத்திற்கு காரணமானவர்கள் குறித்தும் காவல்துறை செயல்பாடு தொடர்பாகவும் விளக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்தநிலையில் இந்த தகவல் தவறு என்று கூறும் வகையில் அருணா ஜெகதீசன் அறிக்கை அமைந்துள்ளது. இது தொடர்பாக அந்த அறிக்கையில், அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்து அனைத்து விபரங்களையும் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தெரிவித்தனர். எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று அப்போது பழனிசாமி கூறியது தவறானது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திசை திருப்ப இபிஎஸ் நாடகம்
இந்தநிலையில் இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டத்திக் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகள் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது. அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் ஏதோ அப்பாவி போல ஊடகங்களிடம் நடித்து வந்தார்.இப்போதும், துப்பாக்கிச் சூட்டின் கொடூரம் தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பதுடன், சபாநாயகரை கண்டித்து உண்ணாவிரதம் என்ற பெயரால் திசைதிருப்பும் நோக்கத்துடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.தனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பெரும் தவறு குறித்த எந்தவித குற்ற உணர்வும் இல்லாத இந்த போக்கு கிரிமினல் தனமான ஒன்று. தமிழ் நாட்டு மக்கள் இதனை மன்னிக்கவே மாட்டார்கள் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்