சிறையில் இருந்தபடி ட்விட்டரில் பிஸியாக இருக்கும் ப. சிதம்பரம்... செம காண்டில் சிபிஐ!

By Asianet TamilFirst Published Sep 28, 2019, 8:17 AM IST
Highlights

கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ப. சிதம்பரம் தனது கருத்துகளை வெளியிட்டுவருகிறார். தனது குடும்ப உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், வழக்கறிஞர்கள் சந்திக்கும்போது ப. சிதம்பரம் சொல்லும் கருத்துகளை குடும்ப உறுப்பினர்கள் ட்விட்டரில் பதிவிட்டுவருகிறார்கள். 

குடும்ப உறுப்பினர்கள் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்துகள் வெளியிடுவதற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் டெல்லி திஹார் சிறையில் உள்ளார். ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், ஜாமினில் வெளிவர கடுமையாக முயற்சி செய்துவருகிறார். ஆனால், சிபிஐ எதிர்ப்பு காரணமாக ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல் நீடித்துவருகிறது. இந்நிலையில் ப. சிதம்பரத்தின் மீதான ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.  அந்த வழக்கில் ப.சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கபில் சிபல் வாதாடி வருகிறார். 
இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ப. சிதம்பரத்துக்கு எதிராக வாதங்களை எடுத்துவைத்தார். “குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக ஆவணங்களும் ஆதாரங்களும் உள்ளன. அவரை ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது.” என்று வாதிட்டவர், “தனது குடும்ப உறுப்பினர்கள் மூலம் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்துகளை வெளியிட்டுவருகிறார். இது  வழக்கின் விசாரணையைப் பாதிக்கிறது.” என்றும் குற்றம்சாட்டினார்.
ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்துவிட்டது. இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி சுரேஷ்குமார் கைத், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தார். ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டபோதும், கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ப. சிதம்பரம் தனது கருத்துகளை வெளியிட்டுவருகிறார். தனது குடும்ப உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், வழக்கறிஞர்கள் சந்திக்கும்போது ப. சிதம்பரம் சொல்லும் கருத்துகளை குடும்ப உறுப்பினர்கள் ட்விட்டரில் பதிவிட்டுவருகிறார்கள். இந்நிலையில் ப. சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவுகளுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்ற காவலில் உள்ள ஒருவர், சமூக ஊடகங்களில் கருத்துகள் பதிவிட முடியுமா என்பது குறித்து நீதிபதியின் தீர்ப்பில்தான் தெரியவரும். 

click me!