இனி இப்படி கூட நடக்கலாம்..அடுத்த ரெய்டில் சிக்குவது ஈபிஎஸ்- ஓபிஎஸ்..? முத்தரசன் பகீர்..

By Thanalakshmi VFirst Published Jan 21, 2022, 3:55 PM IST
Highlights

எதிர்காலத்தில் காந்தி படம் உள்ள அலங்கார ஊர்தி வந்தாலும் இவர்கள் நிராகரித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
 

இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்‘‘புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் மத்தியில் இருந்து எந்த நிதியும் வரவில்லை.

அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 10 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. பொங்கலுக்கு அறிவித்த பொருட்கள் இதுவரை வழங்கப்படாமல் அறிவிப்போடு நிற்கிறது. கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் புத்தாண்டு கொண்ட்டாட்டத்துக்கு புதுச்சேரி அரசு தடை விதிக்காததால், அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களுடைய பாதிப்பை பற்றி கவலைப்படாத அரசாக என்.ஆர். காங்கிரஸ்-பாஜக அரசு உள்ளது.

புதுச்சேரிக்கு பொறுப்பு ஆளுநர் நியமிக்கப்பட்டு 10 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படவில்லை. தற்போதைய ஆளுநர் பாஜகவை சேர்ந்தவராக உள்ளார். குடியரசு தலைவர், ஆளுநர், சபாநாயகர் ஆகியோர் கட்சி சார்பற்ற முறையில் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆனால், மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக ஆட்சி நடத்தாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஒற்றர்களாக பயன்படுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே ஆளுநராக இருந்த கிரண்பேடியை போல்தான் தற்போதைய ஆளுநர் தமிழிசையும் செயல்படுகிறார். பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

திருப்பதியில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று ரங்கசாமி பேசுகிறார். புதுச்சேரிக்கு வந்து நான் ராஜா அல்ல என்கிறார். தான் ராஜா இல்லை என்பதை தேர்தலில் சொல்லி இருக்க வேண்டும். தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு இப்போது நான் ராஜா அல்ல என்று கூறுவது ரங்கசாமி வகிக்கும் முதல்வர் பதவிக்கு அழகல்ல. புதுச்சேரியில் போட்டி சர்க்கார்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆளுநர் தான் அறிவிப்புகளை வெளியிடுகிறார். இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. 

புதுச்சேரி மாநில கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். நேரடி கொள்முதல் நிலையங்களை உருவாக்கி விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் வரும் 26-ம் தேதி நடக்கவுள்ள குடியரசு தினவிழா அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கு தமிழக அரசு சார்பில் பாரதியார், வ.உ.சி, வேலுநாச்சியார் படங்கள் அடங்கிய ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை சுதந்திர போராட்ட வரலாறு தெரியாத மத்திய நிபுணர் குழு நிராகரித்துள்ளது. இந்த ஊர்தியை புறக்கணிக்கக் கூடாது, அனுமதிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியும் பயனில்லை. 

நாட்டின் விடுதலை போராட்டத்துக்கு பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எந்த தொடர்பும் கிடையாது. விடுதலை போராட்ட வரலாற்றை மூடி மறைத்துவிடும் முயற்சியை மத்திய பாஜக அரசு மேற்கொள்கிறது. எதிர்காலத்தில் காந்தி படம் உள்ள அலங்கார ஊர்தி வந்தாலும் இவர்கள் நிராகரித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கடந்த 17-ம் தேதி முதல் தொடர்ந்து போராடி வருகிறோம். வரும் 26-ம் தேதி மாநில கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்துவிட்டு நல்லக்கண்ணு தலைமையில் சென்னையில் மத்திய அரசின் மோசமான செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழகத்தில் மக்கள் நலன் பணியில் ஈடுபடாமல் முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் வேலையில் ஈடுபடுவதாக ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் சொல்கிறார்கள். அடுத்து அவர்களும் விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.’’என்று அவர் தெரிவித்தார்.

click me!