
பேனர் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காததாகக் கூறி தலைமை செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர், டிஜிபி உள்ளிட்ட 9 பேர் மீது திமுக எம்.எல்.ஏ கார்த்திக் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பேனர்கள், கட் அவுட்களை அகற்றக்கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்களோ அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களோ வைக்கக்கூடாது என உத்தரவிட்டது. மேலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது எனவும் இதை உள்ளாட்சி நிர்வாகமும் போலீசாரும் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
ஆனாலும் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக, சாலையையும் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து பேனர்களும் அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.
கடந்த டிசம்பர் 3-ம் தேதி கோவையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக விழாவிற்கு 10 நாட்களுக்கு முன்னரே பேனர்களும் அலங்கார வளைவுகளும் ஆளும் அதிமுக அரசு சார்பில் வைக்கப்பட்டது. சாலையையும் நடைபாதையையும் ஆக்கிரமித்து பேனர்களும் கட் அவுட்களும் வைக்கப்பட்டன. சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவின் மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ரகு என்ற இளைஞர் கீழே விழுந்தார். அவர் மீது லாரி ஏறி உயிரிழந்தார். சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அலங்கார வளைவுதான், ரகுவின் உயிரிழப்புக்குக் காரணம் என கோவை மக்கள் கொந்தளித்தனர். கோவை மக்களின் எதிர்ப்பை அடுத்து பேனர்களும் அலங்கார வளைவுகளும் அவசர அவசரமாக அகற்றப்பட்டன.
பேனர்கள், கட் அவுட்கள் வைப்பது தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் அரசு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதையடுத்து, கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திக் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், பேனர்கள் தொடர்பான உத்தரவை செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 27ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், பேனர்கள் தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் புறக்கணித்ததால் கோவையில் ரகு என்ற இளைஞர் உயிரிழந்துவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல், சாலையையும் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி ரகு உயிரிழந்தார். எனவே நீதிமன்றத்தின் உத்தரவை முறையாக செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பேனர்கள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். பேனர்கள் விவகாரத்தில் விதிகளை பின்பற்றுவதில்லை. விதிகளை மீறி சாலையை ஆக்கிரமித்து பேனர்களையும் கட் அவுட்களையும் வைக்க அரசு அதிகாரிகள் எப்படி அனுமதி கொடுக்க முடியும்? சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுதான் ரகுவின் உயிரிழப்புக்குக் காரணம் என தெளிவாக தெரிகிறது. எனினும் மரணம் தொடர்பான விசாரணைக்குள் செல்ல விரும்பவில்லை. விதிகளை மீறி அனுமதியில்லாமல், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பேனர்கள், கட் அவுட்கள் மற்றும் அலங்கார வளைவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். எந்த கட்சியினராக இருந்தாலும், விதிகளை மதித்து நடக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத தலைமை செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 9 பேர் மீது கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திக் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முடியும் வரை பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத தலைமை செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர், காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன், உள்துறை செயலாளர், கோவை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.