பிடிகொடுக்காத அரசு.. பிடிவாதம் பிடிக்கும் தொழிற்சங்கங்கள்!!

 
Published : Jan 11, 2018, 04:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
பிடிகொடுக்காத அரசு.. பிடிவாதம் பிடிக்கும் தொழிற்சங்கங்கள்!!

சுருக்கம்

court condemns transport association in strike issue

போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு, பிடித்தம் செய்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ச்சியாக 8வது நாளாக இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக தொழிற்சங்கங்கள் சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை ஏற்றுக்கொண்டால், பணிக்கு திரும்ப தயார் என தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளன.

அந்த மனுவில், அரசு வழங்கிய 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்கால நிவாரணமாக ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் கேட்பதற்கும், அரசு கூறுவதற்கும் இடையேயான 0.13 மடங்கு வித்தியாசம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நடுவராக நியமித்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பாக, அந்த நடுவர் மூன்று மாத காலத்திற்குள் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தொமுச சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதிகள் பால்வசந்தகுமார், சண்முகம், கே.என்.பாஷா ஆகியோரில் ஒருவரை மத்தியஸ்தராக நியமிக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் எதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்பதையும் நீதிமன்றமே தெரிவிக்கலாம். போராட்டத்தின் போது ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நடுவராக நியமிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் நிபந்தனையை ஏற்றுக்கொள்வதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மத்தியஸ்தர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்குத் தயார். ஆனால் தொழிற்சங்கங்கள் கோரும் ஊதிய உயர்வை வழங்குவது தொடர்பாக உறுதியாக எதுவும் தெரிவிக்க முடியாது. அதுதொடர்பாக மத்தியஸ்தர் முடிவு செய்யட்டும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலத்திற்கான ஊதியம் வழங்கப்படாது. அதேபோல், போராட்டத்தின்போது வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களின் மீதான வழக்கு திரும்பப் பெறமாட்டாது. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை கூடுமான வரை, ஓய்வுபெற்றவுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தொழிலாளர்களின் நலன் குறித்து மட்டுமே பேசும் தொழிற்சங்கங்கள், பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கவலை கொள்ளவே இல்லை. ஊதிய உயர்வு குறித்து தானே பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தரை நியமிக்க சொன்னீர்கள். ஆனால் இப்போது குற்ற வழக்குகள், போராட்ட காலத்திற்கான ஊதியம் ஆகியவை எல்லாம் குறித்து பேச வேண்டும் என்கிறீர்கள். தொழிலாளர்களின் நலனுக்காகவே மத்தியஸ்தரை நியமிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. அந்த பேச்சுவார்த்தையை ஏற்பதும் மறுப்பதும் தொழிற்சங்கத்தின் விருப்பம். இதற்கு உடன்படாவிட்டால், மத்தியஸ்தர் நியமனம் எல்லாம் கிடையாது. வழக்கை நீதிமன்றமே விசாரிக்கும் என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!