
மதுரையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக சட்ட விரோதமாக நாட்டுவெடிகுண்டு தயாரிக்கும் போது குண்டு வெடித்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை வாழைத் தோப்பு, கீரைத்துறை போன்ற பகுதிகள் பெரும்பாலும் சமூக விரோதிகளின் கூடாரமாகவே இருந்து வருகிறது. மதுரையைச் சேர்ந்த பெரும்பாலான ரௌடிகள் இந்தப்பகுதியில் தான் ஒளிந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வாழைத்தோப்பு பகுதியில் முனிசாமி, நரசிங்கம் என்ற இருவர் சட்டவிரோதமாக நாட்டுவெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக நாட்டுவெடிகுண்டுகள் வெடித்தன்.
இதில் இருவரும் பலத்த காயமடைந்த சம்பவ இடத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தனர். வெடிச்சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்திலிருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த குண்டு வெடிப்பின்போது அந்த வீடு இடிந்து முற்றிலும் தடைமட்டமானது.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு உயிருக்கு ஆபத்தாவன நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
முனிசாமியின் சகோதரர் ஒருவரை கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் ஒரு கும்பல் சராமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதற்கு பழி தீர்ப்பதற்காக முனிசாமி தனது கூட்டாளிகளுடன் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.