சர்வாதிகாரியாக முடியுமா ஸ்டாலின்?: ஓர் அலசல்

By Vishnu PriyaFirst Published Nov 14, 2019, 6:25 PM IST
Highlights

’சர்வாதிகாரியாக மாறுவேன்!’ என்று கொக்கரித்திருக்கிறார் ஸ்டாலின். ஆட்டம் போடும் தன் கட்சி நிர்வாகிகளை அதிர வைக்கவும், அடி பணிய வைக்கவும், அவர் கையிலெடுத்திருக்கும் மந்திரம் இது! என்றாலும், அவரால் சர்வாதிகாரி ஆக முடியுமா?, சர்வாதிகாரத்துக்கு ஃபிட் ஆவாரா ஸ்டாலின்? தி.மு.க.வில் சர்வாதிகாரம் சாத்தியப்படுமா? எனும் கேள்விகள் எழுந்து நிற்கின்றன வரிசையாக.

’சர்வாதிகாரியாக மாறுவேன்!’ என்று கொக்கரித்திருக்கிறார் ஸ்டாலின். ஆட்டம் போடும் தன் கட்சி நிர்வாகிகளை அதிர வைக்கவும், அடி பணிய வைக்கவும், அவர் கையிலெடுத்திருக்கும் மந்திரம் இது! என்றாலும், அவரால் சர்வாதிகாரி ஆக முடியுமா?, சர்வாதிகாரத்துக்கு ஃபிட் ஆவாரா ஸ்டாலின்? தி.மு.க.வில் சர்வாதிகாரம் சாத்தியப்படுமா? எனும் கேள்விகள் எழுந்து நிற்கின்றன வரிசையாக. இது குறித்து தமிழக அரசியல் பார்வையாளர்கள், விமர்சகர்கள் தரப்பில் பேசியபோது வந்து குவிந்த தகவல்களின் தோரணம் இது....


”ஸ்டாலின் இப்போது இல்லை, கருணாநிதி ஆக்டீவாக இருக்கும்போதே, ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருந்த நேரத்திலேயே ‘அ.தி.மு.க. போல் நம் கட்சியிலும் சர்வாதிகாரத்துடன் தலைமை செயல்பட வேண்டும்.’ என்றார். இதற்கு மேடையில் சிலேடையாகவும், பின் முக்கிய நிர்வாகிகளின்  ஆலோசனையின் போது வெளிப்படையாகவும் கருணாநிதியும், அன்பழகனும் ‘ஜனநாயகம்  போற்றும் இயக்கமான தி.மு.க.வில் சர்வாதிகாரத்திற்கு வாய்ப்பே இல்லை.’ என்று சொல்லி, ஸ்டாலினின் ஆசைக்கு முடிவு கட்டினர். 
இந்த சூழலில்தான் கருணாநிதி மறைந்து, அன்பழகன் படுத்த படுக்கையாகி, பொதுச்செயலாளர்! எனும் அதிகாரம் அவரிடமிருந்து ஸ்டாலினுக்கே மாறிவிட்ட பொதுக்குழுவில் மீண்டும் ‘சர்வாதிகாரி’ ஆக ஆசைப்பட்டுள்ளார் ஸ்டாலின். இது சாத்தியமா? என்றால், நிச்சயம் இல்லை.

ஸ்டாலின் சர்வாதிகாரியாக வாய்ப்பே இல்லை. அவரது அரசியல் ஸ்டைலுக்கும், தி.மு.க.வின் டிஸைனுக்கும் அது சரிப்பட்டு வராது. ஜெயலலிதா சர்வாதிகாரத்தனம் காட்டினாரென்றால் அவரது குணம் அப்படி. மேலும், வந்தால் வரட்டும், போனால் போகட்டுமென்று எதிலும் அதிரடியாய் களமிறங்குவார். பெரும் பற்றுக்களை கொண்டிருந்த பற்றற்ற மனுஷி! எனும் விநோத நிலையில் ஜெ., இருந்தார். ஆனால் ஸ்டாலினோ அப்படியில்லை. குடும்ப நிலையிலும், அரசியல் நிலையிலும் அவர் பலருக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார். பலரை அவர் அணுசரித்துப் போக வேண்டியுமிருக்கிறது. தன் கட்சியில் சில முக்கிய மனிதர்களை அவர் பல விஷயங்களுக்கு சார்ந்து இருக்கிறார். அவர்கள் என்ன சொன்னாலும், கண்ணைக் கட்டிக் கொண்டு அதை நம்புகிறார். ஜெ., சசியை இப்படி நம்பினாலும், திடீரென அந்த சசியையே தூக்கி வீசுமளவுக்கு தைரிய லட்சுமியாய் இருந்தார். ஆனால் ஸ்டாலினோ எந்த கால்த்திலும்  தன் நிழல்களை பகைப்பதில்லை, கட்டுப்படுத்துவதுமில்லை. 


கட்சியில் சில முக்கியஸ்தர்கள் செய்யக்கூடிய அக்கிரமங்கள் குறித்து அடிப்படை ஆதாரங்களுடன் பல முறை புகார்கள் கொடுக்கப்பட்டும், எந்த பலனுமில்லை. அவர்களுக்கு எதிராக ஒரு துரும்பை கூட அவரால் எடுத்துப் போட முடியவில்லை. இந்த நிலையில், இவ்வளவு வயதான நிலையிலும், அந்த நபர்கள் இப்போது ஸ்டாலினையே ஆட்டி வைக்கும் அதிகார மையங்களாகிவிட்ட நிலையிலும் சர்வாதிகாரம் என்பது சாத்தியமே இல்லை. சிறுபான்மை வாக்கு வங்கியின் காவலனாக காட்டிக் கொள்ளும் தி.மு.க.வின் தலைவர் எனும் முறையில் இந்து சம்பிரதாயங்களை சீண்டுகிறார் ஸ்டாலின். ஆனால் தன் மனைவி பல இந்து ஆலயங்களுக்கும் ஏறி இறங்குவதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. 
தன் குடும்ப உறவுகள் விமர்சனத்துக்கு உள்ளாவதை ஒரு காலத்திலும் அவரால் தடுக்க முடியவில்லை. இந்தி திணிப்பை எதிர்க்கும் ஸ்டாலினால் தன் மகள் செந்தாமரை நடத்தும் பள்ளியில் இந்தி சொல்லித் தருவதையும், தன் முக்கிய நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில் இந்திப் பாடம் இருப்பதையும் தடுக்க முடியவில்லை. மதுவால்  தமிழகம் தள்ளாடுது! என்கிறார். ஆனால், தன் நிர்வாகிகள் மது ஆலைகள் வைத்திருப்பதை கேள்வி கேட்க முடியவில்லை.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எனவே ஸ்டாலினுக்கும், தி.மு.க.வுக்கும் சர்வாதிகாரம்! என்பது சாத்தியமே இல்லை.” என்கிறார்கள். 
உண்மைதானா!?

click me!