சென்னை மாநகராட்சியில் ரூ.4,000 கோடி டெண்டரில் ஊழல்..! திமுக அரசு மீது அண்ணாமலை பகீர்

Published : Nov 21, 2025, 04:17 PM IST
Chennai Corporation

சுருக்கம்

சென்னை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணிக்கான ரூ.4,000 கோடி டெண்டரில் மாபெரும் ஊழலை அரங்கேற்ற திமுக அரசு முயற்சிப்பதாக முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணிக்கான ரூ.4,000 கோடி டெண்டரில் மாபெரும் ஊழலை அரங்கேற்ற திமுக அரசு முயற்சிப்பதாக முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் வாயிலாக ஏற்கனவே ஒரு பெரும் ஊழல் நடைபெற்றதை, கடந்த மார்ச் மாதம் சுட்டிக் காட்டியிருந்தோம். தற்போது, மீண்டும் ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்ற திமுக அரசு திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னை மாநகராட்சி 4 மற்றும் 8 ஆகிய இரண்டு மண்டலங்களில், வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணிக்கான தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளி கோரல், கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, சுமார் ரூ.4,000 கோடி ஆகும். ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்க கடைசி நாள், ஏற்கனவே நான்கு முறை தள்ளி வைக்கப்படதாகக் கூறப்படுகிறது. இறுதியாக, நவம்பர் 20, 2025 நேற்றைய தினம் மாலை 3 மணி வரை, ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, மூன்று நிறுவனங்கள், தங்கள் ஒப்பந்தப்புள்ளியை சமர்ப்பித்திருந்தனர்.

இந்த நிலையில், ஒட்டு மொத்த விதிகளையும் மீறி, நேற்று மாலை 3 மணிக்கு முடிவடைந்த ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிப்பை, மீண்டும் ஒரு நாள் நீட்டித்து, இன்று (நவ.,21) கடைசி நாள் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பு, நேற்று மாலை, 4 மணிக்கு மேல் வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான பின்னர், மேலும் ஒரு நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

இதன்படி, ஏற்கனவே மூன்று நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளி மதிப்பைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளி மதிப்பை அமைத்து, ஒப்பந்தம் தங்களுக்குக் கிடைப்பதற்குச் சாதகமாகவே, இந்த கால நீட்டிப்பு செய்துள்ளதாக அறிய முடிகிறது.

ஏற்கனவே நேரம் முடிவடைந்த ஒப்பந்த அறிவிப்பை, மீண்டும் கால நீட்டிப்பு செய்வது, முற்றிலும் விதிமீறல் மட்டுமின்றி, ஒப்பந்தத்தின் வெளிப்படைத்தன்மையையும் பாதிப்பதாகும். இந்த விதிமீறல் காரணமாக, ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி கோரிய மூன்று நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், ஒப்பந்த மதிப்பான சுமார் ரூ.4,000 கோடியில், பெருமளவில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.

உடனடியாக, சென்னை மாநகராட்சி, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும், இந்த கால நீட்டிப்பு செய்தது யார் வற்புறுத்தலில் என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். நேரம் முடிவடைந்த பின்னர், ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனம் யாருடையது, அவர்கள் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்’’ என அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு
உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்