ஊழல் பேர்வழிகள் உலகில் எங்கும் பாதுகாப்பாக இருக்க முடியாது.. சாட்டையைச் சுழற்றும் பிரதமர் மோடி.!

By Asianet TamilFirst Published Oct 21, 2021, 8:31 AM IST
Highlights

நாட்டையும், நாட்டு மக்களையும் ஏமாற்றும் ஊழல்பேர்வழிகள் உலகில் எங்கும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 

குஜராத் மாநிலம் கெவாடியாவில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், சிபிஐ கூட்டு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ நாட்டு மக்களின் உரிமைகளை ஊழல் பறிக்கிறது. அது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகவும் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த சக்திக்கும் ஊழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அரசு நடைமுறைகளில் ஊழலை அனுமதிக்க முடியாது. அதற்கு புதிய இந்தியா ஒருபோதும் தயாராக இல்லை. இன்றைய அரசியலின் விருப்பம், ஊழலை தகர்ப்பதே ஆகும். ஊழலை ஒழித்து நிர்வாகத்தில் தொடர் வளர்ச்சியை ஏற்படுத்துவதே நம் எண்ணம்.
கடந்த 7 ஆண்டுகளில் ஊழலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அரசு வெற்றி பெற்றுள்ளது. இடைத்தரகர்களோ லஞ்சம் இல்லாமலோ அரசு திட்டப் பலன்களை ஒவ்வொருவரும் பெற முடியும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு வந்துள்ளது. ஊழல் செய்பவர்கள் எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும், அவர்கள் எங்கு சென்றாலும் தப்ப முடியாது என்பதை மக்கள் உணர ஆரம்பித்துகிறார்கள். நாட்டின் நலனுக்காக பணிபுரியும் அதிகாரிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன். தொழில்நுட்பம் மற்றும் அனுபவத்தின் மூலமாக ஊழலை ஒழிக்க முடியும். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நீங்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். நாட்டையும், நாட்டு மக்களையும் ஏமாற்றும் யாரும் எங்கும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
உலகின் எந்த மூலையிலும் அவர்கள் ஓடி ஒளிய முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய இந்தியாவுக்குத் தடையாக இருக்கும் நடைமுறைகளை மத்திய கண்காணிப்பு ஆணையம், சிபிஐ மற்றும் இதர ஊழல் தடுப்பு அமைப்புகள் கண்டறிந்து அகற்ற வேண்டும். ஊழலைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்ற புதிய இந்தியாவின் கொள்கையை நீங்கள் வலுப்படுத்த வேண்டும்.” என்று பிரதமர் மோடி பேசினார்
 

click me!