Breaking News: கொரோனா தடுப்புசி மருந்து ஆலையில் தீ விபத்து.. தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பு இல்லை என தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jan 21, 2021, 4:14 PM IST
Highlights

இந்நிலையில்  சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிந்துவருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

கொரோனா தடுப்புசி மருந்தான கோவிஷீல்ட்  உற்பத்தி செய்யப்படும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள   இந்நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ள மருந்துகள் பல மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் மருந்தை இந்தியாவில் புனைவை சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையில் வெற்றபெற்றதைத் தொடர்ந்து,  இந்த தடுப்பூசியை உடனடியாக மக்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு அதிகாரப்பூர்வ அனுமதி அளித்ததை அடுத்து, அது நாடு முழுவதும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

இந்த தடுப்பூசி 70 முதல் 80 சதவீதம்வரை செயல் திறன் உடையதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல குறைந்த விலையில் இந்த தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு அனுமதி கிடைப்பதற்கு முன்னரே, அந்நிறுவனம் 200 மில்லியன் டாலர்கள் மதிப்பில் 300 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்தது. தங்களது நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளில் 50% இந்தியாவுக்கு  வழங்கப்படுமென சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. மீதமுள்ள மருந்துகளே பிற நாடுகளுக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் முன்கள பணியாளர்களுக்கான சுமார் 30 கோடி டோஸ்களை உற்பத்தி செய்த அந்நிறுவனம் இரண்டாம் கட்ட விநியோகத்திற்காக, மருந்துகளை உற்பத்தி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில்  சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிந்துவருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ நிறுவனத்தில் எந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இது தடுப்பூசி உற்பத்தி செய்யும் பகுதியில் ஏற்பட்டுள்ளதா?  தடுப்பூசிகள் தீயில் பாதிக்கப்பட்டுள்ளதா?  என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்த கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை. இந்நிலையில் தீ விபத்து,  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கட்டுமானப் பகுதியில் ஏற்பட்டுள்ளது என்றும். இதனால் தடுப்பூசி மற்றும் தடுப்பூசி உற்பத்தி ஆலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும். தடுப்பூசி உற்பத்தி மற்றும் ஆலைகளை பாதுகாப்பாக உள்ளது என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

click me!