தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குறைந்த அளவில் ஒதுக்கீடு.. மத்திய அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி.

By Ezhilarasan Babu  |  First Published May 25, 2021, 10:21 AM IST

தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குறைந்த அளவில் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.


தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குறைந்த அளவில் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழக அரசு சார்பில் சுகாதார துறை செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், இந்திய அளவில் தமிழகத்தில் தான் பலி எண்ணிக்கையும் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

மேலும், ஒடிசா மாநிலத்தில் இருந்து  146 டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், அவை முழுமையாக கிடைக்கவில்லை எனவும், யாஸ் புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்படலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல மத்திய அரசு சார்பில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தமிழகத்துக்கு குறைவான அளவில் தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் இருந்து மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய இயலாத நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர். 

அதேபோல யாஸ் புயல் காரணமாக ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் சப்ளை பாதிக்கும் என்பதால் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் எனவும், தடுப்பூசி தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் மூடநம்பிக்கைகளை களைந்து, தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மே 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். முன்னதாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்,  சிரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாராகி விடும் என நம்பிக்கை தெரிவித்தார். 

 

click me!