4,000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியை, அரசியல் நிகழ்வாக மாற்றக் கூடாது.. திமுகவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published May 25, 2021, 9:58 AM IST
Highlights

கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியை, அரசியல் நிகழ்வாக மாற்றக் கூடாது எனவும், ரேஷன் கடைகளில் ஆளுங்கட்சியின் சின்னம் இடம் பெறக் கூடாது எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியை, அரசியல் நிகழ்வாக மாற்றக் கூடாது எனவும், ரேஷன் கடைகளில் ஆளுங்கட்சியின் சின்னம் இடம் பெறக் கூடாது எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை  அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுகவை சேர்ந்த தேவராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜனவரி மாதம் முந்தைய அதிமுக அரசால் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கிய போது, அதற்கான டோக்கன்களை அரசியல் கட்சியினர் வழங்க கூடாது எனவும்,  நியாய விலை கடைகளில் கட்சி சார்பில் பதாகை வைக்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறும் வகையில் தற்போது கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் வழங்கும் நிகழ்வுகளில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக  குற்றம் சாட்டியுள்ளார். 

உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் நியாயவிலை கடைகளுக்கு அருகே சாலையோரம் திமுகவினர் பேனர்கள்  வைத்திருப்பதால்  அரசு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் ஆளும் கட்சியினர் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். நியாய விலை கடை அருகே ஆளும் கட்சியினர் விளம்பர பலகை வைக்க தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரபட்டுள்ளது. இந்த வழக்கு  தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, நிவாராண உதவி வழங்கப்படும் ரேஷன் கடைகளில் உதய சூரியன் சின்னம் இடம்பெற்றுள்ளதாகவும், முதல்வரின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், தேர்தல் அறிவிக்கப்பட இருந்த நேரத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதால், அங்கு அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது எனவும், பேனர்கள் வைக்க கூடாது எனவும் வழக்கு தொடரப்பட்டதாகவும், தற்போதைய நிலையும், அப்போதைய நிலையும் வெவ்வேறு எனவும் சுட்டிக்காட்டி வாதிட்டார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நிவாரண உதவி வழங்கும் போது, அரசு மட்டுமே முன்னிலைப்பருத்த வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் படம் ரேஷன் கடைகளில் இடம் பெறுவது தவறில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், ஆளுங்கட்சி சின்னத்தை   பயன்படுத்த கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நிவாரணம் வழங்குபவர்கள், இந்நிகழ்ச்சியை அரசியல் நிகழ்வாக மாற்ற கூடாது எனவும்,  அரசியல் சாயம் கொடுக்க கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், நிவாரண உதவிகள் வழங்கும் போது  கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

click me!