தேர்தல் அதிகாரிக்கு கொரோனா... டிரைவராக மாறி மருத்துவமனையில் சேர்த்த மதுரை மாவட்ட ஆட்சியர்..!

By Thiraviaraj RMFirst Published Apr 3, 2021, 5:02 PM IST
Highlights

மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தனது செயல்பாடுகளால் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். மீண்டும் அப்படியொரு செயல்பாட்டை காட்டி சபாஷ்களை அள்ளி வருகிறார். 
 

மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தனது செயல்பாடுகளால் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். மீண்டும் அப்படியொரு செயல்பாட்டை காட்டி சபாஷ்களை அள்ளி வருகிறார். 

சமீபத்தில் மனவளர்ச்சி குன்றிய இளைஞரை இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர வைத்து அந்த இளைஞரின் கால்களை தனது மடியில் வைத்துக் கொண்டு வாகனத்தை அன்பழகன் இயக்கிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பாராட்டுதல்களை பெற்றுத் தந்தது. மாற்றுத்திறனாளிக்கு தனது சொந்த செலவில் ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்து தனது பெருந்தன்மையை நிரூபித்தார். 

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கான காவல் துறை பார்வையாளராக உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி தரம் வீர் யாதவ் கடந்த 10 நாட்களாக பணியாற்றி வருகிறார். மதுரை மாநகராட்சி அலுவலகம் எதிரே இருக்கும் காவல்துறை விடுதியில் தங்கியிருந்த அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. மாவட்ட தேர்தல் ஆணையம் தரம் வீர் யாதவுக்காக நியமிக்கப்பட்டிருந்த அந்த ஓட்டுநர், கொரோனா அச்சம் காரணமாக தன்னால் மருத்துவமனைக்கு வர இயலாது என தயங்கியுள்ளார்.

இதனை அறிந்த மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அடுத்த நொடியே கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு தனது சொந்த காரில் தரம் வீர் யாதவை அழைத்து கொண்டு, அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த, அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி, தேர்தல் அதிகாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அவர் தங்கியிருந்த அறையில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு, உடன் பணியாற்றிய நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியரின் செயலைப்பாராட்டி அனைவரும் மகிழ்ந்து வருகின்றனர்.

click me!