எனக்காக இவ்வளவு தூரம் வந்த அமித்ஷா.. உருகிய ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பு.

By Ezhilarasan BabuFirst Published Apr 3, 2021, 2:58 PM IST
Highlights

அமித்ஷாவுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. எனக்காக இவ்வளவு தூரம் வந்து பிரச்சாரம் செய்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் எழுச்சி அதிகமாக இருக்கிறது.  

ஜெயலலிதா ஆட்சியில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருந்தார்கள, அதுபோல மோடியின் ஆட்சியிலும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தனக்காக இவ்வளவு தூரம் வந்து பிரச்சாரம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை எனவும், ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு  நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ளன. தமிழகத்தில் இறுதி கட்ட பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக-திமுக மற்றும் கூட்டணி கட்சியினரும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த முறை இரட்டை இலக்க வெற்றியுடன் சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்ற முனைப்பில் தமிழக பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவுக்கு என தனித்துவத்தை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சி தலைவர்கள் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னை தேனாம்பேட்டையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள குஷ்புவை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் தனக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமித்ஷாவை குஷ்பு வியந்து நயந்து பாராட்டியுள்ளார்.அமித்ஷாவின் பிரச்சாரத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு கூறியதாவது:  

அமித்ஷாவுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. எனக்காக இவ்வளவு தூரம் வந்து பிரச்சாரம் செய்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் எழுச்சி அதிகமாக இருக்கிறது. செல்லும் இடமெல்லாம் நீங்கள் ஜெயித்து வர வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். இந்த இறுதிக் கட்ட பிரச்சாரம் விறுவிறுப்பாகவும், முக்கியமானதாகவும் இருக்கிறது. காலை முதல் மாலை வரை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்.எல்லா விஷயத்திலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்பதே என் ஆசை. ஜெயலலிதா ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். அதேபோன்று மோடி ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு நலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது. மேலும் பெண்களுக்கு எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அதைச் செய்வேன் என்றார்.  

 

click me!