கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கும் மருத்துவ வசதியை ஏற்படுத்துவதன் மூலம் தான் கிராமப்புற மக்களைக் காப்பாற்ற முடியும். அதற்கான ஒரே வழி கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுவது தான்.
கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கும் மருத்துவ வசதியை ஏற்படுத்துவதன் மூலம் தான் கிராமப்புற மக்களைக் காப்பாற்ற முடியும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், மற்றொருபுறம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்படாமலேயே கிராமப்புறங்களில் பலர் உயிரிழந்து கொண்டிருக்கும் துயரமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் கொரோனா சிகிச்சை குறித்த விழிப்புணர்வும், அதற்கான வசதிகளும் இல்லாததே இதற்குக் காரணமாகும்.
undefined
தமிழ்நாட்டில் நேற்றைய நிலையில் தினசரித் தொற்றுகளின் எண்ணிக்கை 35,873 ஆகும். இது அதற்கு முந்தைய நாள் எண்ணிக்கையை விட 311 குறைவு ஆகும். சென்னையிலும் தினசரி கொரோனா தொற்று 454 குறைந்து 5,559 ஆக உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், கடலூர், நெல்லை உள்ளிட்ட மேலும் 15 மாவட்டங்களிலும் தினசரி கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆனால், இதை நினைத்து மனநிறைவடைய இயலவில்லை. காரணம்... இவை கணக்கில் காட்டப்பட்ட புள்ளி விவரங்கள் மட்டும் தான். கணக்கில் காட்டப்படாமலும், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மையே தெரியாமலும் ஏராளமான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்; அவர்களில் குறிப்பிடத்தக்க அளவிலானோர் உயிரிழந்து வருகின்றனர். மருத்துவ விழிப்புணர்வு பெறாத கிராமங்களில் வாரத்திற்கு ஒருவராவது கொரோனா தொற்று ஏற்பட்டதே தெரியாமல் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது தொடர்கதையாகி விட்டது.
இதற்கான முக்கியக் காரணம் கிராமப்புறங்களில் வாழும் மக்களில் பெரும்பான்மையினருக்கு கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை. ஒருவேளை கொரோனா தொற்று உறுதி செய்யப்பாட்டாலும் கூட அவர்களுக்கு உள்ளூரில் மருத்துவ வசதிகள் கிடைக்காததும், வெளியூர்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவம் பெறுவதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாததும் தான் இத்தகைய உயிரிழப்புகளுக்கு காரணம் ஆகும். மற்றொருபுறம், ஒரு கட்டத்தில் நகரப்புறங்களில் அதிக அளவில் பரவி வந்த கொரோனா வைரஸ் இப்போது கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் கிராமப்புற மக்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கும் மருத்துவ வசதியை ஏற்படுத்துவதன் மூலம் தான் கிராமப்புற மக்களைக் காப்பாற்ற முடியும். அதற்கான ஒரே வழி கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுவது தான்.
தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 1806 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவை தவிர 422 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 20 படுக்கைகளும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 50 படுக்கைகளும் கொண்ட முதல் நிலை கொரோனா சிகிச்சை மையங்களை தொடங்குவதன் மூலம் 57,120 படுக்கைகளை ஏற்படுத்தி மருத்துவம் வழங்க முடியும். தேவைப்பட்டால் கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களை தற்காலிக மருத்துவ மையங்களாக மாற்றி அங்கும் மருத்துவம் அளிக்கலாம். ஒவ்வொரு கிராமத்திலும் கொரோனா பாதிப்புகள் குறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் அறிக்கை பெற்று அதனடிப்படையில் அங்கு சோதனை மற்றும் சிகிச்சை செய்ய வேண்டும். கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்நிலை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுவதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பது மட்டுமின்றி, நோய்த் தொற்று பரவுவதையும் கட்டுப்படுத்த முடியும்.
இன்றைய நிலையில், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 2 லட்சத்து 84,278 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர். இவர்களில் பாதி பேருக்கு கூட அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் அளிக்க முடியவில்லை. பாதிக்கும் மேற்பட்டோர் வீட்டுத் தனிமையில் தான் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆரோக்கியமாக உள்ள பலர் வீடுகளில் தனிமையில் இல்லாமல் வெளியில் சுற்றிக் கொண்டு கொரோனாவை பரப்பி வருகின்றனர். போதிய உடல் வலிமையும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கு வழியில்லாதவர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைத்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்கள் தேவையின்றி வெளியில் சுற்றி நோயைப் பரப்புவதையும், மருத்துவ கண்காணிப்பும், சத்தான உணவும் கிடைக்காமல் உயிரிழப்பதையும் தடுக்க முடியும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்படும் முதல் நிலை கொரோனா சிகிச்சை மையங்களில் லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் மருத்துவம் வழங்கலாம். அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அடுத்தநிலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்களின் உடல்நிலையை கண்காணிப்பது, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவது ஆகியவற்றை மட்டும் செய்யலாம். இதற்கு ஏற்கனவே அங்கு இருக்கும் மருத்துவ பணியாளர்களுடன் கூடுதலாக சிலரை மட்டும் நியமித்தால் போதுமானது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா சிகிச்சை அளிப்பதன் மூலம் வட்ட மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளுக்கு அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் படையெடுத்து அங்குள்ளவர்களுக்கு தேவையற்ற அழுத்தம் தருவதை தவிர்க்க முடியும். எனவே, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல் நிலை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் கிராமப்புறங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா தொற்றுகளைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என ராமதாஸ் கூறியுள்ளார்.