அண்ணா அறிவாலயத்தை விட்டு உடனடியாக வெளிய போங்க... தொண்டர்களின் பொறுப்பற்ற செயலால் கடுப்பான ஸ்டாலின்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 2, 2021, 1:47 PM IST
Highlights

ஆனால் திமுக தலைவரின் அன்புக்கட்டளையை மீறி அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது சோசியல் மீடியாவில் வைரலானது. 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை தபால் வாக்குகளை எண்ண ஆரம்பித்ததில் இருந்தே திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.  தற்போதைய நிலவரப்படி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 147 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 86 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதனால் உற்சாகமடைந்த திமுக தொண்டர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஒன்று கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில்,  “தமிழகமோ பெருந்தொற்றின் காரணமாகத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. படுக்கைகள் கிடைக்காமலும், ஆக்சிஜன் கிடைக்காமலும் நோயாளிகள் அவதிப்படும் நிலையை ஊடகங்களில் பார்த்து நான் பதைபதைத்துப் போகிறேன்.இந்தச் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தோ, சாதகமான முடிவுகள் வர வர ஒன்றுகூடியோ நம் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தச் சூழலில் இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்துகொள்வதும், வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு நம் இல்லத்திலேயே மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு. திமுக வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என்னுடைய தலையாய நோக்கம் என்பதைப் புரிந்துகொண்டு நம் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே இத்தகைய அலட்சியப்போக்கால் அவதிப்படக் கூடாது என்று மாற்றுக் கட்சித் தோழர்களுக்கும் என்னுடைய வேண்டுகோளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என வேண்டுகோள் விடுத்திருந்தார். 

ஆனால் திமுக தலைவரின் அன்புக்கட்டளையை மீறி அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது சோசியல் மீடியாவில் வைரலானது. இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சற்று நேரத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா தொற்றை மனதில் கொண்டு நாளை முதல் திமுக அதற்கான அரசு பணிகளை மேற்கொள்ள உள்ளது. அதனை திமுக தொண்டர்கள் உணர்ந்து வீதிகளில் வந்து வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடாமல், வீடுகளுக்குள் குடும்பத்துடன் மகிழ்ச்சியை கொண்டாடுங்கள். தயவு செய்து எக்காரணத்தைக் கொண்டு வீதிக்கு வர வேண்டாம் என்றும், அண்ணா அறிவாலயத்தில் கூடி இருக்கிற அத்தனை பேரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் பட்டாசு வெடிப்பதையும், இனிப்புகள் வழங்குவதையும் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

click me!