பொதுமக்கள் அலட்சியம்.. தமிழகத்தில் கடுமையாகப்போகிறது ஊரடங்கு... அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு..!

By Asianet TamilFirst Published May 13, 2021, 10:21 PM IST
Highlights

தற்போது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி உள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுகவில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, அதிமுகவில் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம், காங்கிரஸில் விஜயதாரணி, முனிரத்தினம், பாஜகவில் நயினார் நாகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டில் நாகை மாலி, சின்னதுரை, மதிமுகவில் பூமிநாதன், சின்னப்பா, இந்திய கம்யூனிஸ்ட்டில் ராமச்சந்திரன், மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். இதன் பின்னர் இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் உரிய நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது; நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் இக்காலக்கட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் பொதுக் கூட்டங்கள், ஏனைய அரசியல் கட்சி நிகழ்வுகள் போன்றவற்றை முற்றிலுமாக நிறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.


மேலும், நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதால், கள அளவில் அனைத்துக் கட்சியினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைபிடித்திடுமாறு மக்களை அறிவுறுத்தி, வழிகாட்டிகளாக நடப்பது, மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் அனைவரும் முழு மனதோடு ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க சட்டமன்றக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

click me!