கொங்கு மண்டலத்தில் கண்ணாமூச்சு ஆடும் கொரோனா.. சென்னையிலிருந்து 1633 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பிவைப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jun 15, 2021, 12:12 PM IST
Highlights

இதன் காரணமாக அவசர தேவைக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொண்டு zero delay அவசர சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டு, மூச்சு திணறல் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.  

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பெறப்பட்ட 4903 ஆக்சிஜன் செறிவூட்டிகளில், 1633 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையில் தாக்கம் அதிகரித்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஆக்சிஜனுக்கான தேவை அதிகரிக்க துவங்கியது. பலருக்கு ஆக்சிஜன் வசதி கிடைக்காத சூழல் ஏற்பட்டு, அதனை சமாளிக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக அவசர தேவைக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொண்டு zero delay அவசர சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டு, மூச்சு திணறல் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. 

 

அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு சார்பில் சென்னை மாநகராட்சி சார்பிலும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் சந்தை விலைக்கே பெறப்பட்டதோடு, பல தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோரும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கினர். அந்தவகையில், மாநகராட்சி சார்பாக 2705 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சந்தை விலைக்கும், சென்னை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் 2198 ஆக்சிஜன் செறியூட்டிகள் நன்கொடையாகவும் பெறப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள மருத்துவமனைகள், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள், கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட மையங்களுக்கு 2990 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாகவே மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சென்னை மாநகராட்சி ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அதனடிப்படையில், அதிகபட்சமாக கோவைக்கு 569 செறியூட்டிகளும்,  ஈரோடு மாவட்டத்திற்கு 319 செறியூட்டிகள் என இதுவரை 1633 ஆக்சிஜன் செரியூட்டிகள் சென்னை மாநகராட்சி சார்பில் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொற்று பரவல் தற்போது குறைந்துள்ள காரணத்தால் பயன்படுத்தப்படாத 168 ஆக்சிஜன் செறியூட்டிகள் மாநகராட்சி கைவசம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

click me!