கொரோனா பாதிப்பு குறையுது... சாவு எண்ணிக்கை அதிகரிக்குது... மு.க. ஸ்டாலின் அரசை குடையும் ஓபிஎஸ்..!

By Asianet Tamil  |  First Published Jun 5, 2021, 10:15 PM IST

கொரோனாவல் பாதிப்போரின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், உயிரிழப்புகள் அதிகமாவதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். 
 


இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நோய்த்தொற்று பரவல் இறங்குமுகமாக இருக்கிறது என்பதும் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்துவருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
கொரோனா நோய்த் தொற்று தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்றும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 100 நபர்களில் குறைந்தபட்சம் ஒருவர் உயிரிழக்கிறார் என்றும் புள்ளிவிவரங்கள்  தெரிவிக்கின்றன.
கடந்த 10 நாட்களாக இந்த நிலை மேலும் அதிகரித்து காணப்படுகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை 460-க்கும் குறையாமல் இருந்துவருகிறது. மே 25 அன்று 34,285 பேருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு உறுதியான நிலையில், உயிரிழப்பு 468 என்று இருந்தது. அதாவது, பாதிக்கப்பட்டோரில் 1.366 விழுக்காட்டினர் உயிரிழந்துள்ளனர். இந்த விழுக்காடு படிப்படியாக அதிகரித்து, ஜூன் 4 அன்று பாதிக்கப்பட்டோரில் 2 சதவிகிதத்தினர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது, 22,651 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 463 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னை மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 253 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, உயிரிழந்தோரில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் இந்த இரண்டு மண்டலங்களைச் சேர்ந்தவர்கள். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றிருக்கிற இந்த சூழ்நிலையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.


எனவே, முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், ஆக்சிஜன் தட்டுப்பாடு நீக்கப்பட்டு, படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ள இந்தத் தருணத்தில், உயிரிழப்புகள் அதிகமாவதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 

Tap to resize

Latest Videos

click me!