கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும்.. சென்னை மாநகர ஆணையர் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Feb 10, 2021, 5:01 PM IST
Highlights

சென்னையில் இதுவரை 26 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும்,  நாள் ஒன்றிற்கு 5 ஆயிரம் நபர்களுக்கு அளிக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகம் அருகே அடர் காடுகள் உருவாக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தபின் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர். மாநகர் முழுவதும் 1000 இடங்களில் அடர்வனம் உருவாக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டு அதன் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், பல் உயிர் பெருக இது வாய்ப்பாக அமையும் என்றும், 32வது இடமாக தலைமை செயலகம் பூங்காவில் உருவாக்கி உள்ளதாகவும் கூறினார்.  

மேலும், 2000 ஆயிரம் நாட்டு மரக்கன்றுகள் நட்டு வளர்ந்துள்ளதாக கூறிய அவர், இந்த இடத்தில் மரங்கள் வளர்ப்பை அதிகப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தடுப்பூசியை பொருத்தவரை சென்னையில் சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும், சென்னையில் இதுவரை 26 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும்,  நாள் ஒன்றிற்கு 5 ஆயிரம் நபர்களுக்கு அளிக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

கொரோனா தடுப்பூசி மையங்கள் கூடுதலாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், ஊடகங்களுக்கு மட்டும் தனியாக 2-3 மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என குறிப்பிட்ட அவர், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் மட்டுமே கொரோனா வை ஒழிக்க முடியும் எனவும் கேட்டுக்கொண்டார். 

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தனி நபர் விருப்பத்தை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருவதாகவும், முககவசம் அணிவதை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். சென்னையில் அம்மா கிளினிக்குகளில் பணி செய்ய 200 மருத்துவர்கள், 200 செவிலியர்கள், 200 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேண்டும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். ஏன் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக பணி நியமனம் செய்யவில்லை என கேள்வி எழுப்பியதற்கு,  இந்த முடிவு நீதிமன்றம் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் எடுக்கப்பட்டுள்ளது என பதிலளித்தார்.  

 

click me!