கொரோனாவும் ஆடி மாதமும் முடிந்தது... காவல் நிலையங்களில் குவியும் காதல் ஜோடிகள்..!

By Thiraviaraj RMFirst Published Aug 21, 2021, 12:45 PM IST
Highlights

கொரோனா, ஆடி மாதம் காரணமாக திருமணம் செய்வதை தவிர்த்து வந்த காதலர்கள் நேற்று மட்டும் ஈரோடு மாவட்டம், பவானி காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு 9 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

கொரோனா, ஆடி மாதம் காரணமாக திருமணம் செய்வதை தவிர்த்து வந்த காதலர்கள் நேற்று மட்டும் ஈரோடு மாவட்டம், பவானி காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு 9 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கொரோனா காரணமாக பலரும் சொந்தங்களை, நட்புகளை சந்திக்காமல் உள்ளனர். காதலர்களுக்கும் இது கஷ்டமான காலமாகவே மாறிவிட்டது. இந்நிலையில் சுப முகூர்த்த தினமான நேற்று பல்வேறு இடங்களில் திருமணம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பவானி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 9 காதல் ஜோடிகள் தங்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் முகூர்த்தம் தினமான நேற்று வெவ்வேறு இடங்களில் திருமணம் செய்து விட்டு பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு பவானி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து மகளிர் போலீசார் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 9 காதல் ஜோடிகளில் ஒருவரின் பெற்றோர் மட்டுமே திருமணத்தை ஏற்று கொண்ட நிலையில், மீதமுள்ள 8 ஜோடிகளில் பெண்களை அவரவர் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். ஓரே நாளில் 9 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போன்று அந்தியூர் காவல்நிலையத்தில் 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இப்படி பல்வேறு ஊர்களில் உள்ள காவல் நிலையங்களிலும் காதல் ஜோடிகள் திருமணத்திற்காக தஞ்சமடைந்து வருகின்றனர்.

click me!