நுரையீரல் பாதிப்பு.. அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்.. ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல்..!

By vinoth kumarFirst Published Apr 19, 2021, 11:45 AM IST
Highlights

கொரோனா பாதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான பாப்பாசுந்தரம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான பாப்பாசுந்தரம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் கரூர் மாவட்டம் வளையப்பட்டியில் 1934 செப்டம்பர் 30-ல் பிறந்தார். பாலாமணி என்ற மனைவி, குளித்தலை கிழக்கு ஒன்றிய அதிமுகசெயலாளராக உள்ள கருணாகரன், கல்யாணகுமார் ஆகிய 2 மகன்கள், கலாவதி என்ற மகள் உள்ளனர். 1972-ம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினர். 1989-ம் ஆண்டு குளித்தலை தொகுதியில அதிமுக ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏவானார். 1991-ல் அதிமுகவின் சார்பில் மீண்டும் குளித்தலையில் போட்டியிட்டு 2-வது முறை எம்எல்ஏவானார்.

2001-ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்று 3-வது முறை எம்எல்ஏவான அவர், 2002-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். 2011-ல் மீண்டும் குளித்தலையில் வென்று 4-வது முறையாக எம்எல்ஏவானார். 2000 முதல் 2003 வரை கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், மாவட்ட அவைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், ஏப்ரல் 7-ம் தேதி வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதன்பின்னர் கொரோனா குணமான நிலையில், நுரையீரல் பாதிப்புக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 5 நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இவர் உயிரிழப்புக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

click me!